அன்புமணிக்கு 2 நாள் கெடு.! ராமதாஸ் எடுத்த முக்கிய முடிவு
பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ளதால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை செப்டம்பர் 3 ஆம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவில் அதிகார மோதல்
பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் காரணமாக பாமக இரண்டாக உடைந்துள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அன்புமணியும் நீக்கி வருகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்
பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 17 அன்று நடந்த சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் தன்னை கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக தொடர்ந்து அறிவித்து, அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்
கட்சி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம், கூட்டணி முடிவுகளில் தன்னிச்சையான செயல்படுதல், கட்சி மாநாடுகளில் ராமதாஸ் மீது பொது விமர்சனம், கட்சி நிதியில் ஏமாற்று முறைகள், மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தவறாக நியமனம் செய்தல், கட்சி உறுப்பினர்களை பிரிவினை செய்தல். கட்சி ஒழுங்கு மீறல், தலைமைக்கு எதிரான செயல்கள், போன்ற 16 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 வரை கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து தற்போது வரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் நிர்வாக குழு கூட்டமானது நடைபெறுகிறது. அப்போது செய்தியாளர்களை ராமதாஸ் சந்திப்பார் சந்திக்கும்போது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தகவலை தெரிவிப்பார் என கூறினார். ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ராமதாஸ், ஒழுங்கு நடவடிக்கை கொடுத்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கும் மாற்றியமைப்பதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
அன்புமணிக்கு 2 நாள் அவகாசம்
ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது ஒரு ஆலோசனை குழு மட்டுமே, இறுதியான முடிவெடுக்கக்கூடிய குழு அல்ல என தெரிவித்தார். இதுவரை அன்புமணி எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. ஒருவேளை 31ஆம் தேதி பதில் அளித்து இருந்தால் நாளை அல்லது நாளை மறுதினம் தான் கடிதம் வரும். அதற்கான வாய்ப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையானது சீலிடப்பட்ட கவரில் பரிந்துரையை கொடுத்துள்ளேன் அதனை வெளியில் கூற முடியாது. ஒன்பது பேரும் கருத்துக்கள் தெரிவித்தனர் அதில் மெஜாரிட்டியாக ஒரு கருத்து வந்துள்ளது அதனை தெரிவித்துள்ளோம்
நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எனவே 3ஆம் தேதி தேதி அன்புமணி மீதான நடவடிக்கையை ராமதாஸ் அறிவிப்பார் என தெரிவித்தார். நாளைய தினம் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது இது கட்சியின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என எம்எல்ஏ அருள் கூறினார்.