- Home
- Tamil Nadu News
- அன்புமணி மொரீசியஸ், தென்கொரியாவில் கூட போட்டியிடுவார்.. இனிமே தான ஆட்டமே இருக்கு - ராமதாஸ் கலகல
அன்புமணி மொரீசியஸ், தென்கொரியாவில் கூட போட்டியிடுவார்.. இனிமே தான ஆட்டமே இருக்கு - ராமதாஸ் கலகல
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பினர் மாம்பழம் சின்னத்தைப் பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

கட்சியை கைப்பற்ற போட்டி
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் முற்றி தற்போது இரு அணிகளாக செயல்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தனது சொந்த மகனையே கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டிய ராமதாஸ் கட்சி தான் தனக்கு பிரதானம் என்று வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் கட்சியை கைப்பற்றும் முனைப்பில் ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் மாறி மாறி போட்டிப் போட்டு வருகின்றனர்.
அன்புமணிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு..?
அந்த வகையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தான் கடிதம் வந்துள்ளது. ஆகையால் நாங்கள் தான் உண்மையான பாமக என அன்புமணி தரப்பு உரிமை கோரியது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ள ராமதாஸ் தரப்பு, முகவரியை மாற்றி பொய்யாக இந்த கடிதத்தைப் பெற்றுள்ளதாக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தது.
டெல்லியில் முகாமிட்ட ராமதாஸ் தரப்பு
இந்நிலையில் ராமதாஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தலைநகர் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்து வருகிறார். தங்கள் தரப்புக்கு தான் கட்சியின் சின்னம், கொடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தீர்க்கமான நம்பிக்கையோடு ராமதாஸ் தரப்பு செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறி பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்து மாம்பழச் சின்னத்தைப் பெற்றுள்ளனர்.
அன்புமணி வருந்தும் அளவிற்கு நடவடிக்கை..
பீகாரில் போட்டி என கூறிய அன்புமணி மொரீசியஸ், தென்கொரியா, ஜப்பானில் கூட போட்டி போடுவார். அன்புமணியை என்றைக்கு கட்சியை விட்டு நீக்கினோமோ அன்றைக்கே எல்லாம் முடிந்துவிட்டது. பை, பையாக பொய் வைத்துக் கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று அவர் வருந்தும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். கட்சி தொடர்பான ஆவணங்ளைத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். டிசம்பர் முதல் வாரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.