போலியான கடிதம்.! ஆதாரங்களுடன் அன்புமணியை இறங்கி அடிக்கும் ராமதாஸ் வழக்கறிஞர்
Ramadoss : பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணி தரப்பு தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றதாக ஆவணங்களை வெளியிட, அது போலியானது என ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் மோதல்
பாமக நிறுவனரான ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமக தலைவர் என அறிவித்தார். இதனையடுத்து அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவியிடங்களுக்கு தேர்தலை ஒரு ஆண்டிற்கு ஒத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள் கூறி விளக்கம் கேட்கப்பட்டது.
அன்புமணி நீக்கம்
ஆனால் அன்புமணியோ விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலில் அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும்,
தலைவராக அன்புமணி, பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன், பொருளாளராக திலகபாமா மற்றும் நிர்வாகிகள் நியமனத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து இருப்பதாக அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு நேற்று ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அன்புமணிக்கே அதிகாரம்
இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், பாமக தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதாக நேற்று வெளியிட்ட வெளியிடப்பட்ட கடிதம் போலி என , ராமதாஸ் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ராமதாஸ் அணியை சேர்ந்த வழக்கறிஞர் கோபு செய்தியாளர்களை சந்தித்தபோது, வழக்கறிஞர் பாலு வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், போட்டி பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் அது என தெரிவித்தார்.
போலியான கடிதம்- ராமதாஸ்
9.8.2025க்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் கடிதம் வெளியாகவில்லை. அதற்கு முன் தேதியிட்ட கடிதமாக அது இருக்கிறது. எனவே அதனை ஏற்க முடியாது. முன் தேதியிட்ட கடிதத்தை வெளியிட்டு பாலு ஏமாற்றி இருக்கிறார். இது கட்சிக்கு செய்யும் துரோகம். தேர்தல் ஆணையத்தின் இலட்சினை கூட இல்லாமல் ஒரு கடிதத்தை பாலு காட்டி இருக்கிறார்.
இந்த கடிதங்களே போலியானவை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசிடம், அன்புமணி சரணடைய வேண்டும் எனவும், சரணடைந்தால் அவர் மன்னிப்பார் என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்
மேலும் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக ராமதாஸ் நியமனம் செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும். மேலும் வழக்கறிஞர் பாலு வெளியிட்ட ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு இருப்பதாகவும் வழக்கறிஞர் கோபு தெரிவித்தார்.