- Home
- Tamil Nadu News
- TN Rain Update: வெயிலில் தகித்த சென்னைக்கு 'குளு குளு' அப்டேட்! 26 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை!
TN Rain Update: வெயிலில் தகித்த சென்னைக்கு 'குளு குளு' அப்டேட்! 26 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை!
TN Rain Update: தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வந்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அனல் கொதித்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித்தவித்து வந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தமிழத்துக்கும் குளிர்ச்சியான மகிழ்ச்சியான செய்தியை சொல்லியுள்ளது.
இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று (மே 4) முதல் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று (மே 5) கனமழை வெளுத்து வாங்கப்போவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதாவது கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நாளை 17 மாவட்டங்களில் கன மழை
இதேபோல் நாளையும் (மே 6) நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கும் மழை வெளுத்து வாங்கும் என கூறியிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி கடுமையாக வெயில் வாட்டிய சென்னையில் இன்று கனமழை கொட்டி தீர்க்கும் என கூறியிருப்பது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்திலும் கனமழை பெய்யும் என கணித்துள்ளது இந்த மாவட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
படிப்படியாக நிரம்பும் அணைகள்
கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதன் மூலம் கேரள எல்லையையொட்டி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மக்களின் உயிர்நாடியாக விளங்கும் பாபநாசம் அணை, மணிமுத்தாறு மற்றும் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

