- Home
- Tamil Nadu News
- சபாஷ் சரியான போட்டி..! ராமநாதபுரம் மன்னர் வாரிசை தூக்கிய எடப்பாடி.! புதுக்கோட்டை இளைய மன்னரை தட்டி தூக்கிய ஸ்டாலின்
சபாஷ் சரியான போட்டி..! ராமநாதபுரம் மன்னர் வாரிசை தூக்கிய எடப்பாடி.! புதுக்கோட்டை இளைய மன்னரை தட்டி தூக்கிய ஸ்டாலின்
ராமநாதபுரம் மன்னர் வாரிசு அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மன்னர் வாரிசும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைகிறார். இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவும் சூழலில் இந்த இணைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களத்தில் திமுக- அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக- திமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே நீயா.?நானா போட்டி அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு இழுத்து செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரம் அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை திமுகவில் இணைத்து எடப்பாடி ஷாக் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இதனையடுத்து ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மறைந்த மன்னர் குமரன் சேதுபதியின் மகன் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளார்.
அதிமுகவில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு
அவர் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதுக்கோட்டை மன்னர் வாரிசை திமுகவிற்கு தூக்கியுள்ளார் ஸ்டாலின், அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான்,
இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். 2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மன்னர் வாரிசு திமுகவில்
இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். கார்த்திக் தொண்டைமான் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார், பின்னர் திமுகவில் இணைந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார்.
இவர் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் அதிமுகவின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவராகவும் இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டார். ஆனால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவிற்கு பதிலடி கொடுக்கும் திமுக
இந்த நிலையில் புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகியான விஜயபாஸ்கருக்கும்- கார்த்திக் தொண்டைமான் இடையே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மாலை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கார்த்திக் தொண்டைமான் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு இணைந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மன்னர் வாரிசு திமுகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.