இந்தியாவிலேயே தமிழக பொருளாதாரம் தான் விரைவாக வளர்வதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தை சுட்டிக் காட்டி அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட பொருளாதாரத்திற்கான புள்ளி விவரப் பட்டியலில் தமிழக அரசின் பொருளாதாரம் வேகமாக வளரும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு !!!
இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது மாண்புமிகு திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழ்நாடு ! முன்பு 9.69 % என்று மதிப்பிடப்பட்ட 2024 - 25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19 % என்று திருத்தி மதிப்பிட்டுள்ளது ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை !
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சி ! 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழ்நாடு ! அன்றும் இன்றும் #திமுக ஆட்சிதான் ! இது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த மகத்தான வெற்றி !
திமுக உடன்பிறப்பு என்ற முறையிலும், தொழில் துறை அமைச்சர் என்ற பொறுப்பிலும் மாண்புமிகு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கழகத் தலைவர் அவர்களின் இந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
