- Home
- Tamil Nadu News
- அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட நிர்வாகிகள்! அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றம்!
அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட நிர்வாகிகள்! அடுத்த சில நாட்களில் திமுகவில் அதிரடி மாற்றம்!
புதுக்கோட்டை மாநகர திமுகவில் நிலவும் சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் விதமாக, கட்சி நிர்வாக வசதிக்காக அந்த மாநகரம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் திமுக பல்வேறு வியூகங்களையும், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாநகரம்
இந்நிலையில் புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து புதுக்கோட்டை மாநகர திமுக பொறுப்பாளராக ராஜேஷ் நியமிக்கப்பட்டார். ராஜேஷ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து புதுக்கோட்டை மாநகர திமுகவில் தொடர்ந்து சர்ச்சைகளும் குழப்பங்களும் எழுந்து வந்தது. ராஜேஷை அந்த பதவிலிருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு
புதுக்கோட்டை மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்திற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள கே.என்.நேரு புதுக்கோட்டை மாநகரத்தில் திமுக நிகழ்வுகளுக்கு எப்போதெல்லாம் செல்கிறாரோ அப்போதெல்லாம் திமுகவினர் ராஜேஷை மாற்றக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற கே.என்.நேருவை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு உள்ளே செல்ல விடாமல் வழியில் தடுத்து நிறுத்தி ராஜேஷை மாற்றவேண்டும் என்று புதுக்கோட்டை மாநகர திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
இந்நிலையில் கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிட புதுக்கோட்டை மாநகரம் வடக்கு, தெற்கு இரண்டாக பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வடக்கு மாநகரம் பொறுப்பாளராக எம். லியாகத் அலி, புதுக்கோட்டை தெற்கு மாநகரம் பொறுப்பாளராக ராஜேஷ் ஆகியோரை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.