- Home
- Tamil Nadu News
- ஜெயலலிதா அருள் வேண்டுமா..? குண்டு கல்யாணத்திற்கு வாழ்வளியுங்கள்..! எடப்பாடிக்கு வந்த அன்பு கட்டளை..!
ஜெயலலிதா அருள் வேண்டுமா..? குண்டு கல்யாணத்திற்கு வாழ்வளியுங்கள்..! எடப்பாடிக்கு வந்த அன்பு கட்டளை..!
Gundu Kalyanam: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் குண்டு கல்யாணத்தின் மருத்துவச் செலவுகளை அதிமுக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

jayalalitha assistant poongundran
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் குண்டு கல்யாணத்தின் மருத்துவ செலவுகளை அதிமுக ஏற்க வேண்டும் என பூங்குன்றன் வலியுறுத்தியுள்ளார்.
பூங்குன்றன்
இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- நடிகர் குண்டு கல்யாணம் அவர்களின் தந்தை நடிகர் குண்டு கருப்பையா அவர்கள் புரட்சித்தலைவருடன் நெருங்கிப் பழகியவர். குண்டு கல்யாணம் அவர்களின் மூத்த சகோதரர் மகாலிங்கம் அவர்கள் தலைவரின் உதவியாளராக கடைசி வரை பணியாற்றியவர். மற்றொரு அண்ணன் சுவாமிநாதன் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவரின் ஆற்காடு அலுவலகத்தில் பணி செய்து வருகிறார்.
நடிகர் குண்டு கல்யாணம்
இந்தக் குடும்பமே புரட்சித் தலைவருக்கும், புரட்சித் தலைவிக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தங்களது வாழ்நாளையே அர்ப்பணித்த குடும்பம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் அவர்கள், கழகத்தின் நட்சத்திர பேச்சாளராக பட்டி தொட்டிகளிலும், பல்லாயிரக்கணக்கான கூட்டங்களிலும் கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். தலைமையின் மீது அன்பு கொண்டவர், இயக்கத்தின் மீது காதல் கொண்டவர், மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இப்போது அந்த நல் இதயம் கொண்டவர் உடல்நிலை காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவச் செலவுகளை அவர் தனியாகச் சமாளிக்க முடியாது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நேரத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருடைய சிகிச்சைக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் ஏற்றிருப்பார் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
எடப்பாடி பழனிசாமி
எனவே, தாய் வழியில் அவருடைய மருத்துவ செலவுகளை கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கழகத்தால் வளர்ந்தவர்கள் அவருக்கு உதவி செய்யவேண்டும். பேரன்பிற்குரிய எடப்பாடியார் அவர்கள் இந்த உண்மை தொண்டனுக்கு வாழ்வளிக்க வேண்டும். அவருக்கு செய்யப்படும் இந்த உதவி, உண்மையில் புரட்சித்தலைவரையே சென்றடையும் உதவி ஆகும். புரட்சித்தலைவரின் ஆசீர்வாதமும், புரட்சித்தலைவியின் அருளும் அதை செய்பவர்களுக்குக் கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என தெரிவித்துள்ளார்.