- Home
- Tamil Nadu News
- ஓரங்கட்டப்படுகிறார் ராமதாஸ்.? பாமகவை கைப்பற்றிய அன்புமணி- வன்னியர் சங்கம் யாருக்கு ஆதரவு.?
ஓரங்கட்டப்படுகிறார் ராமதாஸ்.? பாமகவை கைப்பற்றிய அன்புமணி- வன்னியர் சங்கம் யாருக்கு ஆதரவு.?
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் நடத்திய கூட்டங்களை நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், இன்று நடைபெறும் வன்னியர் சங்க கூட்டத்தில் யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பாமகவில் நீயா.? நானா .? போட்டி
தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர்த்து அதிக வாக்குகளை கொண்ட கட்சியாக பாமக இருந்து வருகிறது. குறிப்பாக வன்னிய மக்களின் ஓட்டுக்களை நம்பி தேர்தல் களத்தில் பாமக போட்டியிடுகிறது. இதன் படி வட மாவட்டங்களில் சுமார் 40 தொகுதிகளில் பாமகவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, அதிமுக, பாஜக என தேர்தல் நேரத்தில் கூட்டணியை மாற்றி மாற்றி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. கட்சியை தொடங்கிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக அன்புமணியின் முடிவிற்கு ராமதாஸ் எதிராக உள்ளார்.
அன்புமணியா.? ராமதாஸா.?
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என ராமதாஸ் பேச்சை அன்புமணி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பின்பற்றவில்லையென கூறப்படுகிறது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பெரும் தோல்வியை பாமக சந்தித்தது. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பாமக பொதுக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்தது. அடுத்ததாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் கட்சியின் தலைவர் என அறிவித்தார். அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என கூறினார்.
ராமதாஸை புறக்கணித்த நிர்வாகிகள்
அடுத்ததாக நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணியை எச்சரிக்கும் வகையில் ராமதாஸ் பேசினார். இதனை தொடர்ந்து கடந்த 16ம் தேதி திண்டிவனம் தைலாபுர தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதில் 95 % நிர்வாகிகள் புறக்கணித்தனர். 182 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களில் வெறும் 23 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 159 பேர் புறக்கணித்தனர். இதனையடுத்து மகளிர் அணி நிர்வாக கூட்டத்தில் 273 நிர்வாகிகள் உள்ள நிலையில் 5 பேர் மட்டுமே வந்திருந்ததால் ராமதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.
பாமகவை கைப்பற்றும் அன்புமணி
ராமதாஸ் நடத்திய தொடர் கூட்டங்களில் பல்வேறு அணிகள் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பெரும்பான்மையானோர் புறக்கணித்ததால் கட்சி நிறுவனரான ராமதாஸ் ஒரங்கட்டப்படுவது உறுதியாகியுள்ளது. அதே நேரம் கட்சிக்குள் அன்புமணி கை ஓங்கி உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழநிலையில் பாமகவின் ஆணி வேராக உள்ள வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று (திங்கள்) காலை 10 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி நிர்வாகிகளுக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இன்றைய கூட்டத்தில் வன்னிய சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்களா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வன்னிய சங்கம் யாருக்கு ஆதரவு.?
ஏற்கனவே பாமக நிர்வாகிகளை ராமதாஸ் அழைக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டாம் என அன்புமணி தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. அதே போல வன்னியர் சங்க கூட்டத்திலும் மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்ட அன்புமணி பங்கேற்க வேண்டாம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்று வன்னிய சங்க கூட்டத்தில் அப்பாவின் கை ஓங்குமா.? அல்லது மகன் அன்புமணியின் கை ஓங்குமா.? என தெரியவரும்.