PMK Vs DMK: பாமக இல்லைனா கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைத்திருக்க முடியாது! சொல்வது யார் தெரியுமா?
அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு, ராமதாஸுக்கு வேறு வேலையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். இதனால் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Ramadoss
அதானியை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.
MK Stalin
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை என்றார். முதல்வரின் இந்த பேச்சால் பாமகவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ராமதாஸ் குறித்து மரியாதை குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Edappadi Palanisamy
பாமகவுக்கு ஆதரவாக பாஜக, சீமான் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த விஷயத்தில் அதிமுக அமைதி காத்து வருகிறது. இந்நிலையில் மக்கள் பிரச்சனைகளை அறிக்கையாக வெளியிட்ட ராமதாஸ் வேலையில்லாதவர் என்றால் முரசொலியில் தினம்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா என பாமக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
Thilagabama
சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பாமக நிறுவனர் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வுகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது ஏன் என கேள்வி கேட்டு ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார். தினம்தோறும் மக்கள் பிரச்சனைகளை அறிக்கையாக வெளியிடும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வேலையில்லாதவர் என்றால், முரசொலியில் தினந்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாமல் எழுதினாரா.
Thilagabama Vs MK Stalin
மைனாரிட்டி அரசு என அதிமுக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்த போது பாமக தான் திமுகவுக்கு கை கொடுத்தது. மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கை பாமக திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், இன்று கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைத்திருக்க முடியாது. தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் ராமதாசை கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியில்லாத தமிழக முதல்வர் பேசி இருப்பது மோசமானது. அவரது இந்த கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வரை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.