- Home
- Tamil Nadu News
- அடிதூள்.! வட்டி தள்ளுபடி... பொதுமக்களுக்கு எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
அடிதூள்.! வட்டி தள்ளுபடி... பொதுமக்களுக்கு எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிந்த திட்டங்களுக்கு அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தும் பயனாளிகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடு, மனை மற்றும் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்கிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, அரசு விதிகளின்படி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முழு தொகை செலுத்திய பின், தேவையான ஆவணங்களுடன் (அடையாளச் சான்று, முகவரி சான்று, கடன் ஆட்சேபனையில்லா சான்று) விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
இந்த நிலையில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உரிய முறையில் செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் தாமாக முழுமையாக செலுத்தாத பயனாளிகளுக்கு மாதத்தவணைக்கான அபராத வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக அபராத வட்டி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
அபராத வட்டி விதிப்பு
இந்த நிலையில் அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வீட்டுவசதித்துறை வெளியிட்ட அரசாணையில், சட்டப்பேரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிந்த குடியிருப்பு திட்டங்களுக்கு மாத தவணை தொகை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்தார்.
அபராத வட்டி- சட்டசபையில் அறிவிப்பு
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் நீண்ட காலம் நிலுவையில் வைத்துள்ள ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ள இயலும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இதை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் தவணைக்காலம் முடிந்த குடியிருப்பு திட்டங்களுக்கு வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாத தவணை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அபராத வட்டி தள்ளுபடி
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனங்களில் விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையானது வரும் 2026 மார்ச் வரை நடைமுறைப்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது எனவீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.