கை விட்ட பாஜக.! தூது விட்ட விஜய்.? கூட்டணியில் இருந்து வெளியேறுகிறரா ஓபிஎஸ்.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இணைய முடியாத ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் தொடர்வதா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்வதா? என ஆலோசித்து வருகிறார். இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ளது. தற்போது உள்ள கூட்டணியை உடையாமல் தேர்தல் வரை கொண்டு செல்ல காய் நகர்த்தியுள்ளது.
இதே போல அதிமுகவும் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக ஒரு சில கட்சிகளிடம் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அதிமுவின் சாதனையும்- வீழ்ச்சியும்
இதனிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே அதிமுகவை திருப்பி பார்க்கவைத்தவர் ஜெயலலிதா, நாட்டின் 3 வது மிகப்பெரிய கட்சி என்ற அடையாளத்தை உருவாக்கி அசத்தினார். இவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக தனித்தனியாக கட்சி நிர்வாகிகள் பிரிந்து சென்றுள்ளனர். ஜெயலலிதா இருந்தவரை முக்கிய நபராக திகழ்ந்த ஓபிஎஸ், அதிகார மோதலில் தனித்து விடப்பட்டார்.
அடுத்ததாக சசிகலா, டிடிவி தினகரன் என தனியாக பிரிந்து சென்றனர். இதனிடையே அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார். இபிஎஸ் தலைமையில் அதிமுக சந்தித்த உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே இபிஎஸ்க்கு கிடைத்துள்ளது. எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஓபிஎஸ்யை கண்டு கொள்ளாத பாஜக
அந்த வகையில் அதிமுகவில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இணைய தயார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து பாஜகவிடம் ஆதரவு தேடி சென்ற ஓபிஎஸ், அதிமுகவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜகவோ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பியது.
இதனால் ஓபிஎஸ்யை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. எனவே அதிமுகவில் இணைந்து விடலாம் என நினைத்த ஓபிஎஸ் கனவு மங்க தொடங்கியுள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் தொடர்ந்தாலும் இரட்டை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட முடியாது. பாஜகவின் தாமரை இலை சின்னத்தில் தான் போட்டியிட முடியும். எனவே அடுத்தக்கட்டமாக என்ன செய்வது. பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா என ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.
பாஜக கூட்டணியில் தொடர்வாரா ஓபிஎஸ்.?
மேலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக, தனது ஆதங்கத்தை பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அதிமுக இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, அதிமுகவுடனான இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலைக்கு பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
இந்நிலையில், எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டி அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் நீடிப்பதா, விலகுவதா? எனவும் முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் பட்சத்தில் விஜய்யின் தவெகவுடன் இணைய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை விஜய் மட்டுமே தனி அணியாக இருப்பதால் ஓபிஎஸ் தலைமையிலான அணி விஜய் அணிக்கு வந்தால் வரவேற்க தயாராக இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.