- Home
- Tamil Nadu News
- மகளிர்களுக்கு குஷி.! இன்று முதல் 1000 ரூபாய் பெற சூப்பர் சான்ஸ்- வீடு தேடி வரும் வாய்ப்பு மிஸ் பன்னாதீங்க
மகளிர்களுக்கு குஷி.! இன்று முதல் 1000 ரூபாய் பெற சூப்பர் சான்ஸ்- வீடு தேடி வரும் வாய்ப்பு மிஸ் பன்னாதீங்க
தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமைத் தொடங்குகிறது. இம்முகாம்களில் விண்ணப்பித்து, திட்டத்தில் இணைய வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழ்நாடு அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித்தொகை மூலம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மற்றும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுத்து வருகிறது.
2023-ல் 1.63 கோடி விண்ணப்பங்களில் 1.06 கோடி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்முறையீடு மூலம் 7.35 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். தற்போது 1.16 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதே திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற காரணத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு தளர்வுகளை வழங்கிய அரசு மகளிர் உரிமைதொகை திட்டத்தில் புதிதாக இணைய விரும்புபவர்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கான விவரங்கள், விண்ணப்பங்கள் தகவல்களை பொதுமக்களுக்கு உதவுவதற்கான "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் தமிழகத்தில் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 15ம் தேதி "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஜுலை 15ம் தேதி சென்னையில் 6 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது. அதன்படி மாதவரம் மண்டலத்தில் 25 வது வார்டு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 38வது வார்டு, திரு.வி.க நகர் மண்டலத்தில் 76வது வார்டு, தேனாம்பேட்டை மண்டலத்தில் 109வது வார்டு, வளசரவாக்கம் மண்டலத்தில் 143வது வார்டு, அடையாறு மண்டலத்தில் 168வது வார்டு என 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின்- வீடு தேடி வரும் வாய்ப்பு
இதனையொட்டி இன்று இந்த 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தொடங்குகிறது. சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் நாள்தோறும் சராசரியாக 6 வார்டுகளில் முகாம்கள் நடத்த திட்டம். சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா இரண்டு முறை முகாம்கள் என 400 முகாம்கள் ஜூலை 15ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முதற்கட்டமாக ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 109 வார்டுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் குறித்த விவரங்களையும், விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களையும் சுமார் 2000 தன்னார்வலர்கள் மக்களிடம் தெரிவித்து வழங்கும் பணியினை மேற்கொள்வார்கள்.
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இதே போல தமிழகம் முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் குறித்த விவரங்களை 7 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெறும். இதில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விவரித்து பயன்களுக்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
மகளிர் உரிமை தொகை பெற வாய்ப்பு
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பொது மக்கள் கலந்துகொள்ளுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வீடு வீடாக சென்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக இன்று முதல் கையேடுகளை வழங்கவுள்ளனர்.