'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். 'புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' எனப் பெயரிடப்பட்டு இன்று  முதல் ஜூலை 21 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்படுகிறது.

ADMK EPS Election Campaign : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. திமுகவை பொறுத்தவரை தொகுதி நிலவரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் மீட்டிங்கை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஆகஸ்ட் மாதம் 2 வது மாநில மாநாட்டை நடத்திய பிறகு தமிழகம் முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். எனவே அடுத்தடுத்து அரசியல் கட்சியின் அறிவிப்பால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுகவும் முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 

முதல் ஆளாக தேர்தல் களத்தில் இறங்கிய எடப்பாடி

அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்று (ஜூலை 7, 2025) முதல் தொடங்கியுள்ளார். இந்தப் பயணம் “புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்” எனப் பெயரிடப்பட்டு, முதல் கட்டமாக ஜூலை 7 முதல் ஜூலை 21, 2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்படுகிறது.. இந்தப் பயணத்தின் மூலம், மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை அறிந்து, 

அதிமுகவின் கொள்கைகளை எடுத்துரைப்பதே எடப்பாடி பழனிசாமியின் நோக்கமாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி தேக்கம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து உரையாடினார். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர்.

விவசாயிகளோடு ஆலோசனையில் இபிஎஸ்

 "எழுச்சி பயணம்" எனப்படும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக, விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறியும் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள், விவசாயிகளின் கோரிக்கை என பல குறைகளை கேட்டறிந்து வருகிறார். 

இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் இபிஎஸ் அப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் என பல அமைப்புகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று முதல் கட்டமாக கோவையில் தொடங்கிய பயணத்தில் எடப்பாடி பழனிசாமியோடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இணைந்திருந்தனர்.