- Home
- Tamil Nadu News
- நேற்று சசிகலா.! இன்று எடப்பாடி.! நாளை யாரோ.?? ஆர்.பி உதயகுமாரை கிண்டலடிக்கும் ஓபிஆர்
நேற்று சசிகலா.! இன்று எடப்பாடி.! நாளை யாரோ.?? ஆர்.பி உதயகுமாரை கிண்டலடிக்கும் ஓபிஆர்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவில் மீண்டும் அதிகார மோதல் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு வடிவம் என ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டிய நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இதனை விமர்சித்துள்ளார்.

நேற்று சசிகலா.! இன்று எடப்பாடி.! நாளை யாரோ.?? ஆர்.பி உதயகுமாரை கிண்டலடிக்கும் ஓபிஆர்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை. நான் பெரியவனா.? நீ பெரியவனா என ஒவ்வொருவரும் மோதிக்கொள்கிறார்கள். அந்த வகையில் பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகிறது. தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவின் வெற்றிக்கு வாய்ப்பு கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
அதிமுகவில் மீண்டும் மோதல்
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்திக்கடவு -அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லையென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்திருந்தார். இதனையடுத்து இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
செங்கோட்டையன்- ஆர் பி உதயகுமார்
அதில், எதிரிகள், துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அது அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அதிமுக மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடும், உழைக்கும் இயக்கம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இனி இல்லை என்ற நிலை வர வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார் என கூறியிருந்தார்.
கிண்டல் செய்த ஓபிஆர்
மேலும் அதிமுகவுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி எனகுறிப்பிட்டவர், ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில், மலரச் செய்ய உழைத்துக் கொண்டிருப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...
நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...
இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...
நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...? என ஓ,பி.ரவீந்திரநாத் கிண்டல் செய்துள்ளார்.