- Home
- Tamil Nadu News
- இரண்டாக உடையும் மதிமுக.! வைகோவுடன் மல்லுக்கு நிற்கும் மல்லை சத்யா - உண்ணாவிரத போட்டத்திற்கு தேதி அறிவிப்பு
இரண்டாக உடையும் மதிமுக.! வைகோவுடன் மல்லுக்கு நிற்கும் மல்லை சத்யா - உண்ணாவிரத போட்டத்திற்கு தேதி அறிவிப்பு
மதிமுகவில் வைகோவிற்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மல்லை சத்யாவை வைகோ 'துரோகி' எனக் கூறியதால், மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளார்.

மதிமுகவில் உட்கட்சி மோதல்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோவுக்கும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவானது வாரிசு அரசியலுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். அதே கட்சியில் வைகோ தனது மகன் துரை வைகோவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
அந்த வகையில் கடந்த ஏப்ரலில் சென்னையில் நடந்த மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவில், மல்லை சத்யா துரை வைகோவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து துரை வைகோ கோபமடைந்து வெளியேறினார். இதன் காரணமாக துரை வைகோ- மல்லை சத்யா என இரு பிரிவாக மதிமுவினர் உள்ளனர்.
துரைவைகோ- மல்லை சத்யா மோதல்
துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து, கட்சியில் முக்கிய பதவிகளில் ஜாதி அடிப்படையில் நியமனங்கள் நடப்பதாக மல்லை சத்யா உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டினர். இது துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே பகிரங்க மோதலாக வெடித்தது. இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது சமாதானம் ஏற்பட்டாலும் அடுத்தடுத்த நடைபெற்ற சம்பவங்கள் மதிமுவில் பிளவை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மல்லை சத்யாவை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டு, “மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என பகிரங்கமாக கூறினார். இது கட்சிக்குள் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
மல்லை சத்யா துரோகி- வைகோ
வைகோவின் துரோகி குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாமல்லபுரம் பகுதி மதிமுக நிர்வாகிகள் கட்சிக் கொடிகள், வைகோவின் படங்கள் ஆகியவற்றை அகற்றி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், வைகோவின் இந்த நடவடிக்கை கட்சியை பிளவுபடுத்துவதாகவும், 32 ஆண்டு உழைப்பை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுவின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் அவரது படங்களை கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.
வைகோவிற்கு எதிராக உண்ணாவிரதம்
இந்த சூழ்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போரட்டம் நடத்தவுள்ளார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையருக்கு மனு கொடுத்துள்ளார். அதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் என்னுடைய 32 ஆண்டுகளா பொதுவாழ்கையை கேள்விக் குறியாக்கும் வகையில் துரோகி என்று சொல்லி சிறுமைப் படுத்தியதற்கு நாட்டு மக்களிடம் நீதி கேட்டு எதிர்வரும் 02.08. 2025 சனிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க சென்னையில் சிவானந்த சாலையில் இடம் ஒதுக்கி தந்து உதவிட அன்புடன் வேண்டுகின்றேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அமைதியாக பேரறிஞர் அண்ணா அவர்கள் கட்டிய அறவழியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்போம் என்று உறுதி கூறுகின்றேன். தோழர்கள் நிழலில் அமர்வதற்கு ஐந்து சார்மினார் பந்தல் மற்றும் ஒலி பெருக்கி அமைத்துக் கொள்ள அனுமதியும் பாதுகாப்பும் வழங்கி உதவிட அன்புடன் வேண்டுகிறேன் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.