உதயநிதியை முதல்வர் ஆக்குவதே லட்சியம்... ஸ்டாலினை ரவுண்டு கட்டிய அமித் ஷா!
திருநெல்வேலியில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.

தமிழில் பேச முடியவில்லையே
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அமித் ஷா, “புனிதமான தமிழ் மண்ணை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் பாஜகவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நாங்கள் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் அவர் சபாநாயகராக இருப்பார்." என்றார்.
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை
“பிரதமர் மோடி தமிழ் மண், மக்கள், மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர். சோழர்களின் பெருமையை உணர்ந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக.” எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும், “பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என ஒரு மசோதாவை நாங்கள் தாக்கல் செய்தோம். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் சிறைக்குச் சென்ற பிறகும் பதவியில் நீடித்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு இந்த மசோதாவை 'கறுப்புச் சட்டம்' என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. அவரே இருண்ட ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.” என்றார்
#WATCH | Tirunelveli, Tamil Nadu: Union Home Minister Amit Shah says, "...Modi ji has presented the 130th Constitutional Amendment Bill in the Lok Sabha. The entire opposition started protesting. What is the Constitution Bill? If any CM or Prime Minister goes to jail, they will… pic.twitter.com/3HDy5tiLnq
— ANI (@ANI) August 22, 2025
உதயநிதி முதல்வர்... இதுதான் ஸ்டாலினின் லட்சியம்
“முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதுதான். அதுபோலவே, சோனியா காந்தியின் ஒரே லட்சியம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதுதான்,” என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.
“'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் வரும் 2026-ல் பாஜக மற்றும் அதிமுகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) ஆட்சிதான் அமையப் போகிறது,” என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.