தவெக மாநாடு ஆரம்பிக்கும் முன்பே முதல் உயிர் ப*! கல்லூரி மாணவனுக்கு நடந்தது என்ன?
விஜய் தலைமையிலான தவெகவின் 2வது மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தவெக தலைவர் விஜய் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக 2வது மாநாட்டை நாளை நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாகன நிறுத்துவதற்காக 3 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநாட்டிற்கு மக்களை அழைத்து வருவதற்கு பயண வாகனங்களை வாடகைக்கு எடுக்க மாவட்ட நிர்வாகிகள் மிரட்டப்படுவதாகவும், வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் மாநாட்டு இடத்திற்கு செல்லும் முக்கிய வழியில் திடீரென பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தவெக மதுரை மாநாட்டிற்காக பேனர் அமைக்கும் பணியில் கல்லூரி மாணவன் காளீஸ்வரன்(19) ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் கல்லூரி இரண்டாம் ஆண்டு காளீஸ்வரன் படித்து வந்துள்ளார்.
மாநாட்டிற்கான வரவேற்பு பேனர் வைக்க முயன்ற போது இந்த துயர சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.