#BREAKING: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! குஷியில் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் அதிமுக உறுப்பினர் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரியமூர்த்தி கட்சி செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், ‘கட்சி விதிப்படி, பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், விதிகளின்படி தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பது குறித்து தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உரியது.
பொதுச் செயலாளர் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செல்லும் என தெரிவித்த நீதிபதி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சூர்யமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூர்யமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும், வழக்கின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தும், சூர்யமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.