விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க! இன்றோடு லாஸ்ட் சான்ஸ்!
பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 1) முடிவடைகிறது. விவசாயிகளின் நலன் கருதி, விவசாயி அடையாள எண் கட்டாயம் என்ற விதியை தளர்த்தி தமிழக அரசு இந்த இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

விவசாயிகள்
விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்கள், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. இயற்கை சீற்றத்தில் பயிர்கள் பாதிக்கப்படும் போது, காப்பீடு மூலம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. பயிர் காப்பீடு செய்ய முதலில் நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை தமிழக அரசு நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாக அறிவித்தது. ஆனால், இன்னும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாததால், அவர்களை நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 1ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றுடன் கடைசி நாளாகும்.
பயிர் காப்பீடு
இதுதொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்டு அறிவிப்பில்: 2025-26ஆம் ஆண்டில், பிரதமந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து ஒன்றிய அரசால் விலக்களிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம்
இதுநாள்வரை, 31.33 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 இலட்சம் விவசாயிகளால் 19.06 இலட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 61 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 1 இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், 2025 நவம்பர் 25 ஆம் தேதி முதல் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்று ஒன்றிய அரசால் மீண்டும் அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் அடையாள எண் பெற்ற நில உரிமைதாரர்கள் தவிர, குத்தகைதாரர்கள், கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
இன்றுடன் கடைசி நாள்
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1ம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அடைகிறது. மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு
மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 இலட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத்தொகை ஒன்றிய அரசின் பங்குதொகையான ரூ.67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

