- Home
- Tamil Nadu News
- சனாதன சங்கிலியை நொறுக்கும் ஒரே ஆயுதம்! சூர்யாவின் அகரம் விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய கமல்ஹாசன்
சனாதன சங்கிலியை நொறுக்கும் ஒரே ஆயுதம்! சூர்யாவின் அகரம் விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய கமல்ஹாசன்
சனாதன சக்திகளை நொறுக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் என்பதால் அனைவரும் அதனை கையில் எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அகரம் அறக்கட்டளை ஆண்டுவிழா
நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழா மற்றும் அறக்கட்டளையின் விதை திட்டத்தின் 15ம் ஆண்டு விழாவானது சென்னை சாய்ராம் கல்லூரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, கமல்ஹாசன், சிவக்குமார், ஜோதிகா, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மெய்சிலிர்த்த கமலஹாசன்
விழாவின் ஒரு பகுதியாக அறக்கட்டளையின் பங்களிப்புடன் 51 மருத்துவர்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அவர்களில் குறிப்பிட்ட நபர்களை மேடையேற்றி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பார்த்து மெய் சிலிர்த்துப்போன நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வியந்து பேசினார்.
கல்வி தான் ஒரே ஆயுதம்
அப்போது அவர் கூறுகையில், “அகரம் அறகட்டளை பல மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. ஆனால் அவர்களால் 2017ம் ஆண்டுக்கு பின்னர் இதனை செய்ய முடியவில்லை. இப்போது புரிகிறதா நீட்டை ஏன் எதிர்க்கிறோம் என்று? 2017ம் ஆண்டு முதல் பெரும்பான்மையான மாணவர்களின் கல்விக் கனவை இந்த சட்டம் கெடுத்துள்ளது. அப்படிப்பட்ட சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது. சனாதன சங்கிலிகளை நொறுக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அந்த ஆயுதத்தை மட்டுமே அனைவரும் கையில் எடுக்க வேண்டும்.
ஆதரவு தேவை
அண்மையில் முதல்வருடன் பேசிக்கொண்டிருந்த போது அகரம் போன்ற தொண்டு நிறுவனங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. அனுமதி மட்மே கேட்கிறார்கள். அதனை செய்து கொடுப்பதில் என்ன வலிக்கப் போகிறது? நாங்கள் அதை செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்ய தான் போகிறோம்” என்றார்.