- Home
- Tamil Nadu News
- டெல்லியில் எனது பகுத்தறிவு ஒலிக்கும்! இனி நடக்க போறத பாருங்க! வாக்குறுதி கொடுக்கும் கமல்ஹாசன்!
டெல்லியில் எனது பகுத்தறிவு ஒலிக்கும்! இனி நடக்க போறத பாருங்க! வாக்குறுதி கொடுக்கும் கமல்ஹாசன்!
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களின் குரலாக பேசுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Kamal Haasan Takes Oath As Member Of Parliament
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ''மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன். இந்தியாவின் இறையான்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன். நான் இப்போது ஏற்க இருக்கும் பொறுப்பினை நேர்மையாக செய்து முடிப்பேன்'' என்று கூறி கமல்ஹாசன் பதவியேற்றார்.
மேல்சபை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசன்
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களின் குரலாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மனம் நிறைந்த பணிவு மற்றும் மனசாட்சியுடன் மேல்சபை எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டேன். புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்.
எம்.பி என்ற அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.பிரிவினையின் ஆபத்துகளிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டும். நான் ஒரு சமூகத்திற்காக அல்ல. பொது நன்மைக்காகப் பேசுவேன். நான் நாடாளுமன்றத்திற்கு வெறும் விமர்சகராக வரவில்லை.
தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்
மாறாக இந்தியாவின் கருத்துக்கு உறுதியான பங்களிப்பாளராக வருகிறேன். நான் எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் அதைச் செய்வேன். ஆதரிக்க வேண்டிய இடத்தில், நான் அதை உறுதியுடன் செய்வேன். ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில், அதை ஆக்கப்பூர்வமாக செய்வேன்.
பெயரளவுக்கு இல்லாமல். ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காகச் செய்வேன். அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன். டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன். குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்'' என்று தெரிவித்துள்ளார்.
எனது பயணம் தொடக்கம்
தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், ''‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் நன்றி
இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிறார் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன'' என்று கூறியுள்ளார்.