- Home
- Tamil Nadu News
- கட்சியும் ரெடி, கொடியும் ரெடி.. எங்க கட்சிக்கு தலைமையேறுங்க.! ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த அஇபுமமுக
கட்சியும் ரெடி, கொடியும் ரெடி.. எங்க கட்சிக்கு தலைமையேறுங்க.! ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த அஇபுமமுக
அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்து வருகிறார்.

அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுக பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டியால் கட்சியானது பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான தீர்ப்புகள் ஓபிஎஸ்க்கு எதிராக வந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைய எந்த வித நிர்பந்தமும் இல்லையென ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென அறிவித்துவிட்டார்.
அதிமுகவில் இணைய காத்திருக்கும் ஓபிஎஸ்
இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறார். தற்போது ஓபிஎஸ் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். கட்சியாக இல்லாமல் அமைப்பாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே தங்கள் கட்சியை தலைமேறுங்கள் என அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ரகுநாதன் வலியறுத்தியுள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டு கட்சிக்கு எம்.ஜி.ஆரின் படம் பொறிக்கப்பட்ட கொடி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் அழைப்பு
மேலும் ஜெயலலிதா இருக்கின்ற பொழுதே எம்ஜிஆர் மீது உள்ள பிரியத்தின் காரணமாக இந்த கட்சி தொடங்கப்பட்டதாகவும், பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்றுவதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு முடிவதற்குள் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அமைப்பின் பெயரில் செயல்படுவது நல்லது அல்ல எனவும்,
எனவே அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தை அவர் தலைவர் பொறுப்பேற்று நடத்துவதற்கு மற்றும் தேர்தலை எதிர்கொள்வதற்கும் எங்களது ஆதரவை அவருக்கு முழுமையாக தெரிவித்ததுடன் எங்கள் கட்சிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எங்கள் கட்சிக்கு தலைமையேறுங்கள்
எங்கள் கட்சிக்கு தலைமை ஏற்கும் பட்சத்தில் அவர் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும் என தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த வாரம் பெரிய குளத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை நேரடியாக சந்தித்து பேசியதாகவும் எங்கள் கட்சியின் பதிவு, கொடி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி உள்ளதாகவும் மேலும் அவர் இது குறித்து நல்ல முடிவு எடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார் என கூறினார். தங்கள் கட்சிக்கு சின்னமாக இரட்டை ரோஜா கேட்டுள்ளதாகவும் மு.ரகுநாதன் கூறினார்.