ஆன்லைன் SIR ரொம்ப சிம்பிள்! வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிப்பது எப்படி?
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) 2026-க்காக, வாக்காளர் பட்டியலில் ஆன்லைனில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய இந்த வழிகாட்டி உதவுகிறது. அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

எஸ்.ஐ.ஆர். (SIR) ஆன்லைன் விண்ணப்பம்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) 2026-க்காக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதற்கு படிப்படியான வழிமுறைகள் உள்ளன.
முதலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை போர்ட்டலான http://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், உங்களது கைபேசி எண், மின்னஞ்சல்/EPIC எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும். புதிய பயனராக இருந்தால், உடனடியாகப் பதிவு (Sign-Up) செய்துவிட்டு உள்நுழையவும்.
விண்ணப்பப் படிவத்தைத் தொடங்குதல்
உள்நுழைந்த பிறகு, முகப்புப் பக்கத்தில் உள்ள 'Special Intensive Revision (SIR) - 2026' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் கீழ் உள்ள 'Fill Enumeration Form' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய மாநிலத்தைத் தேர்வு செய்யவும். உங்களுடைய தற்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC No.) உள்ளிட்டு, விவரங்களைத் தேடிக் கண்டறியவும்.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.
தகவல்களைச் சரிபார்த்தல் மற்றும் குடும்ப இணைப்பு
ஓ.டி.பி. சரிபார்ப்புக்குப் பிறகு, உங்களது தகவல்கள் பாதியளவு நிரப்பப்பட்ட Enumeration Form ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.
வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் பெயரை ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் ஒரு முக்கியமான பகுதி இதுவாகும். இதற்காக, படிவத்தில் கீழே வரும் 3 விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்:
(1) முன்னர் செய்த மாற்றத்தில் இடம்பெற்றிருந்த உங்களது பெயர் நினைவிருந்தால் அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
(2) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
(3) யாருடைய பெயரும் நினைவில்லை என்றால், அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தச் செயல்பாட்டிற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை. ஆதார் எண்ணிலுள்ள பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பெயர் நினைவிருந்தால், அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணோ, பெயரோ, தொகுதியோ ஏதாவது ஒன்று தேவை.
படிவத்தில் உள்ள இணைப்பைப் பயன்படுத்தித் தேடிக் கண்டறிந்து பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றைக் கவனமாக உள்ளிட வேண்டும்.
உறவினரின் தகவலை உறுதி செய்த பின், கேட்கும் மற்ற தகவல்களை உள்ளிட்டு, படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (Submit).
விண்ணப்ப நிலையை அறிதல்
சமர்ப்பித்த பின், உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஒப்புதல் எண் (Acknowledgement Number) ஒன்று வழங்கப்படும். இதை அவசியம் குறித்து வைத்துக்கொள்ளவும்.
படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இணையதளத்தில் உள்ள "Book a call with BLO" என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியோ அல்லது 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ உங்களுடைய வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் (BLO) உதவி கேட்கலாம்.
நீங்கள் கொடுத்த தகவலைச் சரிபார்க்க, BLO உங்களை அழைக்கலாம் அல்லது உங்கள் இல்லத்திற்கே வரலாம். அப்போது உங்கள் விவரங்களைப் பார்க்க வேண்டும்.
படிவத்தைப் பூர்த்தி செய்ய EPIC எண், ஆதார் எண், மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் EPIC எண் ஆகியவை கட்டாயம் தேவை.