சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிராக விஜய்யின் தவெக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தவெக தொண்டர்கள் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதேபோல் நடிகர் விஜய்யின் தவெகவும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

SIR-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்

''SIR காரணமாக தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குரிமை இல்லை என்ற நிலை கூட ஏற்படலாம்.வாக்காளர் பட்டியல் திருத்தம் தானா அல்லது குடியுரிமை மறு பதிவா? என்ற சந்தேகம் உள்ளது'' என்று தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு

சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

வாக்குரிமையை விட்டுத் தர மாட்டோம்

''எங்கள் வாக்குரிமையை விட்டுத் தர மாட்டோம். எளிய மக்களை அலைக்கழிக்காதே''என்று மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கோஷஙக்ளை எழுப்பினார்கள். இதேபோல் கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் என தமிழகம் முழுவதும் அந்தந்த தவெக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவெக தொண்டர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் ஆர்ப்பாட்டம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் முடங்கியிருந்த தவெக, இப்போது மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளது. கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக நடத்திய முதல் ஆர்ப்பாட்டம் இதுதான். SIR-க்கு எதிரான தவெக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ளவில்லை. விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் கூட்டம் கூடி மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதியே அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.