- Home
- Tamil Nadu News
- உடனே இதை செய்யுங்க.! 30 நாள் தான் டைம் - அரசு ஊழியர்களுக்கு பறந்த அரசின் அதிரடி உத்தரவு
உடனே இதை செய்யுங்க.! 30 நாள் தான் டைம் - அரசு ஊழியர்களுக்கு பறந்த அரசின் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பொதுமக்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதால், உடனடி நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள்
அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்களின் பணியானது. அந்த வகையில் எந்த திட்டங்கள் அறிவித்தாலும் உரிய முறையில் செயல்படுத்தினால் மக்களால் பாரட்டப்படுவார்கள். அதுவே திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டாலும் அரசுக்கு தான் கெட்டப்பெயர் உருவாகும்.
எனவே அரசு ஊழியர்களின் செயல்பாட்டை பொறுத்து தான் அரசுக்கு நல்லபெயர் கிடைக்கும். எனவே அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக ஒன்பது முக்கிய நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தார்.
அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு
அந்த வகையில் அக்டோபர் 1, 2025 முதல், 15 நாட்கள் வரையிலான பயன்படுத்தப்படாத விடுப்பை பணமாக மாற்றலாம். இது சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் வகையில் சரண் விடுப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அகவிலைப்படியானது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்பட்டு வருகிறது.
இது போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோரிக்கை மனு மீது பரிசீலனை
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளை மனுக்களின் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்தப் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும்,
மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனைத்துத் துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைக் படிக்கப்பட்ட அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களில் கையாளும்போது வகுத்தளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆணையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களில் மனுக்கள் மீது
மேலும் நடைமுறைகளும், அறிவுறுத்தங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட அனைத்து அரசு அலுவலகங்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட, குறைகளைவு மனுப்பதிவேடு- ஒன்றினை பராமரித்தல் வேண்டும் என கூறப்படுகிறது. அப்பதிவேட்டில், அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்திட வேண்டும்,
அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்திட ஆவன செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும் என தலைமைசெயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.