- Home
- Tamil Nadu News
- பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் மனைவி கொலை! கார் டிரைவர் சரண்டர்! நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி!
பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் மனைவி கொலை! கார் டிரைவர் சரண்டர்! நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி!
கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவர் கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி, வீட்டில் தனியாக இருந்தபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, அவர்களது வீட்டில் 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் சரணடைந்தார்.

அதிமுக பிரமுகரின் மனைவி
கோவை மாவட்டம் பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி(47). சஞ்சய் (21) என்ற மகனும், நேத்ரா என்ற (15) மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் பொறியியல் கல்லூரியிலும், நேத்ரா கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரி
கவி சரவணகுமார் மற்றும் மகேஸ்வரி இடையே கருத்து வேறுபாடு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கவி சரவணகுமார் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இதையடுத்து சஞ்சய் கல்லூரிக்கும், நேத்ரா பள்ளிக்கும் சென்றுவிட்ட நிலையில் மகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரண்
இந்நிலையில் அவர்களது வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்த சுரேஷ் (45) என்பவர் வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை திடீரென கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து வடவள்ளி போலீசார் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்.
போலீஸ் விசாரணை
மகேஷ்வரி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது சுரேஷிடம் விசாரணை செய்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். மகேஷ்வரியை கொலை செய்ததாக சரணடைந்த சுரேஷ் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.