- Home
- Tamil Nadu News
- விஜயை நாங்கள் அடித்தால்கூட கேட்க ஆளில்லை..! கரூரில் போட்டியிட்டால்.. அதிர்ச்சி தரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்..!
விஜயை நாங்கள் அடித்தால்கூட கேட்க ஆளில்லை..! கரூரில் போட்டியிட்டால்.. அதிர்ச்சி தரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்..!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். 8 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, பாதிக்கப்பட்டவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் அவர்களின் குடும்ப பொறுப்பை ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு விஜய் தாமதமான வருகையே காரணம் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆரம்பித்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அரசு மற்றும், காவல்துறை, உளவுத்துறையின் அலட்சியே காரணம் என்று இதில் பெரும் சதி இருப்பதாகவும் திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
திமுக விமர்சனம்
பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ், அன்புமணி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காததை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
மாமல்லபுரம் அழைத்து வரப்பட்ட குடும்பத்தினர்
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பத்தினர் சொன்னபடியே அவரவர் வங்கி கணக்கில் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது. ஆனால், நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 7 ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் விடுதிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கு நடந்தது. பின்னர், அனைவரும் பேருந்துகள் மூலம் கரூர் வந்தடைந்தனர்.
காலில் விழுந்து அழுத விஜய்
இதுகுறித்து கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்: விஜய் நாங்கள் உள்ளே நுழைந்ததும் முதலில் மாமல்லபுரத்திற்கு வரவழைத்ததற்கு என்னை மன்னியுங்கள் என்றார். பின்னர் எங்கள் குடும்பத்தில் இறந்தவர் யார், எங்கள் குடும்ப பின்னணி என்ன என கேட்டார். இறந்தவரின் புகைப்படத்தை பார்த்ததும் கண்ணீர்விட்டார். ஈடு செய்ய முடியாத இழப்பு, உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதே தெரியவில்லை என்றார். குழந்தைகளை இழந்த பெற்றோர் காலில் விழுந்து அழுதார். அவரை தூக்க முயன்றும் அவர் எழவே இல்லை. நாங்கள் கூட தெம்பாகத்தான் இருந்தோம். அவர் மனம் உடைந்து போயிருந்தார்.
அடித்தால்கூட கேட்க ஆளில்லை
அவர் சந்திக்கும் போது பாதுகாவலரோ, செல்போன், வீடியோ எதுவும் கிடையாது. அவர் அறையில் யாருமே இல்லை. அவரை அடித்தால் கூட கேட்க ஆளில்லாத அளவுக்கு தனியாகத்தான் இருந்தார். எங்கள் குடும்பத்தில் இருந்து மட்டும் 8 பேர் போனோம். 8 பேரின் காலிலும் விழுந்தார். குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்வதாகவும் படிப்பு, மருத்துவம் உள்ளிட்டவைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக விஜய் தெரிவித்தார். இந்த இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு மகனாக, அண்ணனாக தம்பியாக உங்கள் குழந்தைக்கு தாய் மாமனாக இருந்து உங்களை பார்த்துக் கொள்வேன். எதுவாக இருந்தாலும் சொல்லுமாறு கூறினாராம்.
கரூரில் போட்டியிட்டால் வெற்றி பெற செய்வோம்
மேலும் உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன் என்றார். ‘குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று கூறியபோதும், குழந்தைகள் உங்களைக் காணவேண்டும் என்ற ஆசையால் அழைத்து வந்துவிட்டோம் என்று கூறி, அவரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டோம். அவர் கண்டிப்பாக ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் வருவதாக சொன்னாராம். கரூரில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெற செய்வோம் என பெண்கள் தெரிவித்தனர்.