- Home
- Tamil Nadu News
- திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா..! சேதாரம் ஆகும் சிறுபான்மையினர் ஓட்டு- ஆடிப் போன அதிமுக
திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா..! சேதாரம் ஆகும் சிறுபான்மையினர் ஓட்டு- ஆடிப் போன அதிமுக
அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சிறுபான்மையின நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். முக்கிய நிர்வாகி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க அதிமுக தீவிர களப்பணியை தொடங்கியுள்ளது. திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்க அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது.
ஆனால் இந்த கூட்டணியானது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு கிடைக்காது என தெரிவித்து வந்தனர்.
இருந்த போதும் இந்த கூட்டணியானது தற்போது வரை நீடித்து வருகிறது. எனவே இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சிறுபான்மையின நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் பிரமுகராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். அன்வர் ராஜா தனது அரசியல் வாழ்க்கையை 1960-களில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கினார். பின்னர், M.G. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார்.
2001-2006: தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 2014-2019 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து 16-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். AIADMK-வின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினராகவும் பணியாற்றினார். அதிமுகவின் தலைமைக்கு எதிராகவும், குறிப்பாக பாஜக கூட்டணி மற்றும் இரட்டைத் தலைமைக்கு எதிராகவும் பேசியதால், கட்சி விதிகளை மீறியதாகக் கூறி 2021 நவம்பர் 30-ல் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சில காலத்திற்கு பிறகு 2023 ஆகஸ்ட் 4-ல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா, கட்சியில் இருந்து விலகியவர் இன்று திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து அன்பர் ராஜா நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து திமுவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில்வில் சிறுபான்மையினரின் முகமாக அறியப்பட்ட அவர், கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தியவர். இருப்பினும், அவரது வெளியேற்றத்திற்குப் பிறகு, அதிமுகவில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டதாக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.