- Home
- Tamil Nadu News
- ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது.. ஒரேடியாக கதவை அடைத்த இபிஎஸ்.. தர்மயுத்த நாயகனின் அடுத்த மூவ் என்ன?
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது.. ஒரேடியாக கதவை அடைத்த இபிஎஸ்.. தர்மயுத்த நாயகனின் அடுத்த மூவ் என்ன?
அண்ணன் எடப்பாடி மனது வைத்தால் தான் அதிமுகவில் சேரலாம் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
வெளிப்படையாக பேசிய ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் தேனியில் இன்று சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ், ''அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று தான் சட்டப்போராட்டம் நடத்துகிறோம்.
அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி
எங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என டிடிவி தினகரன் சொல்கிறார். அதிமுகவில் மீண்டும் இணைய நான் ரெடி. அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி ரெடியா? டிடிவி தினகரன் ரெடியா? அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய டிடிவி தினகரன் முயற்சி எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது
இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், ''அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எடுத்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அதிமுகவுக்கு துரோகம் இழைத்த காரணத்தினால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
பொதுக்குழு எடுத்த முடிவு
இது பொதுச்செயலாளர் மட்டும் எடுத்த முடிவு அல்ல; பொதுக்குழு எடுத்த முடிவு. ஆகவே ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை'' என்று தெரிவித்தார். ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதிமுகவில் அவர் இனிமேல் சேர வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன?
தான் திமுகவில் சேரப்போவதாக வெளியான தகவல் மிகவும் தவறானது என்று ஓபிஎஸ் இன்று கூறியிருந்தார். இதனால் அவர் திமுகவில் சேர வாய்ப்பு குறைவு என தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் அவர் தனிக்கட்சி தொடங்கவும் வாய்ப்பு குறைவுதான். ஆகவே ஓபிஎஸ் விஜய்யின் தவெகவில் ஐக்கியமாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

