- Home
- Tamil Nadu News
- மனோஜ் பாண்டியன், வைத்தியை தொடர்ந்து முக்கிய பிரமுகர் அதிமுகவில்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.. குஷியில் இபிஎஸ்!
மனோஜ் பாண்டியன், வைத்தியை தொடர்ந்து முக்கிய பிரமுகர் அதிமுகவில்.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.. குஷியில் இபிஎஸ்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். பலர் திமுக, தவெகவில் இணைந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான தர்மர் எம்.பி. மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து அக்கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் உட்பட அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
அதேபோல் குன்னம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் திமுகவில் இணையப்போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் ஆர்.தர்மர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மர். முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்த அவருக்கு ஓபிஎஸ் ஆதரவு மூலமாக மாநிலங்களவை பதவி கிடைத்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரான தர்மர் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்ட நிலையில் திமுக? தவெக? யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாமல் தடுமாறி வரும் நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

