- Home
- Tamil Nadu News
- இவரெல்லாம் ஒரு தலைவர்.. விஜய்யை முதன்முறையாக கடுமையாக விமர்சித்த இபிஎஸ்.. தவெகவினர் ஷாக்!
இவரெல்லாம் ஒரு தலைவர்.. விஜய்யை முதன்முறையாக கடுமையாக விமர்சித்த இபிஎஸ்.. தவெகவினர் ஷாக்!
அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறியிருந்த தவெக தலைவர் விஜய்யை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

அதிமுகவை விமர்சித்த விஜய்
சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுக ஊழல் கட்சி என்றும் அதிமுக பாஜகவின் அடிமை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை முதன்முறையாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் ஒரு தலைவரா?
எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அதிமுகவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ், ''கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. விஜய் பேச்சை கேட்க சென்று தான் 41 பேர் இறந்துள்ளனர். நாங்கள் எல்லோரும் கரூருக்கு சென்றோம். ஆனால் அவர் ஏன் செல்லவில்லை? துயரத்தில் இருந்த மக்களை ஏன் சந்திக்கவில்லை? இவரெல்லாம் ஒரு தலைவரா? 41 குடும்பங்களை அனாதையாக்கி விட்டார்.
அரசியலில் அனுபவம் தேவை
விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாங்கள் தான் சிறந்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்ததாக விஜய் கூறுகிறார். அவர் யாருக்காக இவற்றையெல்லாம் விட்டு வந்தார்? அவர் மக்களுக்கு என்ன செய்தார்? நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அரசியல் என்பது சாதாரணம் அல்ல. அரசியலில் அனுபவம் தேவை. அரசியல் என்றால் மக்கள் சந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

