நான் தான் ; ஓபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் இபிஎஸ்.! தேதி குறித்த அதிமுக
அதிமுகவில் அதிகாரப் போட்டியால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தனி அணிகளாகச் செயல்படுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தங்கள் அணியே உண்மையான ஜெயலலிதா தொண்டர்கள் என்கிறார். இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் சொந்தத் தொகுதியான தேனி மாவட்டம் பெரியகுளம் செல்கிறார்.

ஓபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் இபிஎஸ்.! தேதி குறித்த அதிமுக
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால் தலைமை இடத்தை பிடிப்பதற்கு ஒருவருக்குள் ஒருவர் மோதிக்கொண்டனர். இதன் காரணமாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அடுத்தடுத்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, தாங்கள் தான் உண்மையாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் என் கூறிவருகிறார். இதனால் மற்ற தலைவர்களால் தொடர் சட்டப்போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் ஒரு முறை எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மறுமுறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பு வருகிறது.

இறங்கி வரும் ஓபிஎஸ்- விட்டுக்கொடுக்காத இபிஎஸ்
இதனால் எதிர்கட்சியாக உள்ள அதிமுக ஆளுங்கட்சியான திமுகவை எதிர்ப்பதற்கு பதிலாக தங்களுக்குள்ளாவே மோதி வருகிறார்கள். இந்த நிலையில் தான் எந்த வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு தயார் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் ஓபிஎஸ்க்கு தனது சொந்த தொகுதியிலேயே செல்வாக்கு இல்லையென நிரூபிக்க அவரது தொகுதிலேயே காலடி எடுத்து வைக்கவுள்ளார் எடப்பாடி பழனிசாமி,
ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களுடைய அறிவிப்பிற்கிணங்க பொதுகூட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 முதல் 1.3.2025 வரை 5 நாட்கள், அம்மா அவர்களின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேனிக்குள் செல்லும் இபிஎஸ்
இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசவுள்ள இடம் மற்றும் தேதியையும் அறிவித்துள்ளார். இதன் படி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஓ.பன்னீர் செல்வத்தின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நுழைய முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்.
தேதி குறித்த அதிமுக
இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் தனது கோட்டை என நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் மார்ச் 1ஆம் தேதி தேனி பெரியகுளம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ள கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.