பிளான் போட்ட ஜெயலலிதா செயல்படுத்திய எடப்பாடி.! டெல்லியில் கால் பதித்த அதிமுக
ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடம் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா மாளிகை” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிளான் போட்ட ஜெயலலிதா செயல்படுத்திய எடப்பாடி.! டெல்லியில் கால் பதித்த அதிமுக
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலிலதா இருந்த போது அதிமுக, மக்களவை, மாநிலங்களவை என அனைத்திலும் பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்று இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக திகழ்ந்தது.நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் அதிமுகவை திரும்பி பார்க்கும் வகையில் இரும்பு பெண்மனியாக திகழ்ந்தார் ஜெயலலிதா. அந்த வகையில் நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் அதிமுக தலைமை அலுவலகம்
அதன் அடிப்படையில் தமிழக கட்சிகளான அதிமுக, தி.மு.க. கட்சிக்கு உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவிற்கு கொடுப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதே போன்று அதிமுகவிற்கு டெல்லியில் சாகேத் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. புதுடெல்லி அதிமுக அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது.
அதிமுக டெல்லி அலுவலகம் - இபிஎஸ் ஆய்வு
இந்த இடத்தில் அதிமுக அலுவலகம் கட்டும் பணியானது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஏற்பாட்டில் 5.10.2015 அன்று அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து ஜெயலலிதா மறைவு, அதிமுகவில் உட்கட்சி மோதல், கொரோனா பாதிப்பு என அடுத்தடுத்து பல்வேறு தடைகள் ஏற்பட்டது.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி டெல்லி அதிமுக அலுவலகம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார். டெல்லி செல்லும் நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
டெல்லி செல்லாத இபிஎஸ்
இந்த நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகம் முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்று திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளார இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி இல்லாத நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலேயே காணொளி காட்சி மூலம் திறப்பு விழா நடைபெற்றது.
கட்டிடத்தை திறந்து வைத்த எடப்பாடி
"புதுடெல்லி, M.B.ரோடு, இன்ஸ்டிட்யூஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார் - VI, பிளாட் எண்கள். 15 & 22" என்ற முகவரியில் புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கழக அலுவலகமான "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா மாளிகை"-யை காணொளிக் காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இக்கட்டிடம் தரைத் தளம், முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என நான்கு தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது. ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய அதிமுக டெல்லி அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி தற்போது திறந்து வைத்துள்ளார்.