- Home
- Tamil Nadu News
- LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?
LED பல்ப் முறைகேட்டில் வேலுமணியை இறுக்கும் ED.. அதிக தொகுதிகளை பறிக்க பாஜக ஸ்கெட்ச்..?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இடையே இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், எல்இடி பல்ப் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்பி வேலுமணி மீதான ஊழல் புகார் மீதான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
ரூ.74 கோடி இழப்பு
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி பொறுப்பு வகித்தார். அவரது துறையில் மாநிலம் முழுவதும் 8 லட்சம் தெருக்களுக்கு எல்இடி விளக்குகள் பொருத்த, 300 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எல்இடி பல்ப் வாங்கியதில் அரசுக்கு ரூ.74 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
விசாரணையை தீவிரப்படுத்தும் ED
அதே போன்று 2019 – 20ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது பேரூராட்சிகளுக்கு எல்இடி விளககுகள் கொள்முதல் செய்ததில், 97.33 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு விபரங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதிமுகவை மிரட்டும் பாஜக..?
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெறும் நிலையில், கட்சின் முன்னணி நிர்வாகி மீதான ஊழல் புகாரை அரசு தீவிரமாக விசாரிக்கத் தொடங்கி உள்ளதால், கூட்டணியில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

