காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “திராவிடம் என்றாலும், திராவிட இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலும் கசக்கின்றது! மிகவும் எரிகிறது! ஒடுக்கப்பட்டவர்கள் மேலெழுந்து வருகிறார்கள் என்றதுமே, எவ்வளவு வன்மம் வெளியே வருகிறது. வரலாற்றை சிறிது திரும்பிப் பார்த்தோம் என்றால், விமர்சனங்கள் என்ற பெயரில், எத்தனை அவதூறுகள், எவ்வளவு காழ்ப்புணர்வு.

திராவிட மாடல் என்றால் சிலருக்கு எரிகிறது

நாம் திராவிட மாடல் என்று சொல்ல, சொல்ல அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரிகின்றது! அவர்களுக்கு திரும்ப, திரும்ப எரியவேண்டும் என்று தான், நாமும் திரும்ப, திரும்ப திராவிட மாடல் என்று சொல்கின்றோம்! நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு எப்படி இருந்தது; இன்றைக்கு எப்படி இருக்கின்றது? இதே காலகட்டத்தில், நாட்டின் பிற மாநிலங்கள் அடைந்திருக்கின்ற சமூக வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி - உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்லோரையும் விட, அனைத்து வகையிலும் நாம் இருபது ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்!

தியாக வரலாற்றை, கண்ணீர் வரவழைக்கக்கூடிய தியாகிகளின் வரலாற்றை, இன்றைய இளைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்! தி.மு.க என்றால், என்னவென்று ஹிஸ்டரியை திரும்பி பார்த்தீர்கள் என்றால், போராட்டம்! போராட்டம்! போராட்டம்! சிறை! சிறை! சிறை! தியாகம்! தியாகம்! தியாகம்! - இதுதான் தி.மு.க.!

கருப்பு, சிவப்பு தான் உயிர்மூச்சு

அரசியலில், பலரும் சொகுசை எதிர்பார்த்து வருவார்கள்… ஆனால், தி.மு.க.வுக்கு அந்த சொகுசு கிடையாது! சில இயக்கங்களைப் பார்த்தீர்கள் என்றால், சிறிய எஃப்.ஐ.ஆர். பதிவானாலே, கட்சிவிட்டு கட்சி தாவுவார்கள்! ஆனால், கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு, அவதூறுகளையும், பழிச்சொற்களையும், வன்மத்தையும் தாங்கி, கருப்பு, சிவப்புதான் உயிர்மூச்சு, அண்ணாவும், கலைஞரும் சொன்ன கொள்கைகள்தான் கட்டளை என்று இலட்சியத்திற்காக வாழ்கின்றவர்கள் தான், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள்!

எதிரிகள் மாறுவார்கள்! தி.மு.க. மட்டும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது!

நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். “இவ்வளவு அவதூறுகளை, தரம் தாழ்ந்த வசவுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்” என்று கேட்பார்கள்… அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால், இவைகள் எல்லாம் எங்களுக்கு புதிதா? இன்றைக்கு நேற்றா பார்க்கிறோம்! பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில், “வாழ்க வசவாளர்கள்” என்று தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அதனால்தான், காலங்கள் மாறுகிறது! எதிரிகள் மாறுவார்கள்! ஆனால், தி.மு.க. மட்டும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது!

எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக..

காலந்தோறும் உருவாகின்ற அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் எதிர்கொண்டு, நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்! நாம் சூரியனைப் போல, நிரந்தரமான ஒளியை வழங்கிக் கொண்டே இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.