- Home
- Career
- டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!
CM Stalin சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர் நியமனம் மற்றும் TET தேர்வில் முதல்வர் ஸ்டாலின் 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முழு விவரம் உள்ளே.

CM Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 20, 2025 திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டார். இவ்விழாவில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக நான்கு மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகிகளே ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம்
முதல் அறிவிப்பாக, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் புதிய அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இடம்பெற்று ஆசிரியர்களைத் தேர்வு செய்யலாம். இதற்கான அரசாணையில் கையெழுத்திட்ட பின்னரே தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் புதுப்பிப்பு
இரண்டாவது அறிவிப்பாக, இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் அமைந்துள்ள மூக்கையூர் கிராமத்தின் மிகவும் பழமையான புனித யாக்கோபு தேவாலயத்தை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேவாலயம் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அரசால் புனரமைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
TET தேர்வு சிக்கலுக்குத் தீர்வு - 1,439 பேர் நியமனம்
மூன்றாவதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் சிறுபான்மை நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றது. இந்த நடவடிக்கையின் பயனாக, தற்போது வரை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதல்வர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான சட்டக் கேள்வியை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பரிசு: 470 ஆசிரியர்களுக்கு பணி ஆணை
நான்காவது மற்றும் முக்கிய அறிவிப்பாக, புதிய விதிமுறைகள் வருவதற்கு முன்பே நியமிக்கப்பட்டு, ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் 470 ஆசிரியர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆணைகள், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள்ளாகவே வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்
இறுதியாகப் பேசிய முதல்வர், "எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இயேசுவின் எண்ணத்திற்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் இடமளிக்காது" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

