நம்முடைய பணி அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எந்த மக்களும் இன்று திமுகவுக்கு ஓட்டு போடத் தயாராக இல்லை. திமுகவுக்கு எப்போதும் வாக்களிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் கூட இன்று அதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள்.
‘‘2026 -ல் நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணியை எடப்பாடி அமைப்பார். அடுத்த 100 நாட்களுக்கும் நமது ஒரே பணி, அது தேர்தல் பணி மட்டுமே’’ என என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி, ‘‘இந்தப் பொதுக்குழு சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, மீண்டும் 2026ல் எடப்பாடியாரை முதலமைச்சராக அமர வைக்க கூடிய பொது குழு. தமிழக மக்களை ஏமாற்றி, பொய் வாக்குகளை அள்ளி வீசிய திமுக அரசு, அதிகாரம் கைக்கு வந்ததுமே மக்கள் பிரச்சினைகளை எல்லாம் மறந்துவிட்டு, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களை வாட்டி வதைக்கக்கூடிய ஆட்சிக்கு முடிவுரை கட்டவேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் எந்த மக்களும் நிம்மதியாக இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் அற்புதமான இயக்கம் என்றால் அது அதிமுகதான். கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் பொன்விழா கண்ட இயக்கம்.

31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறோம். அதிகமான திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தது அதிமுக. திமுக இப்போது ஆட்சியில் இருந்தாலும் எதுவுமே செய்வதில்லை. தமிழ்நாட்டுக்கு துரோகம் மட்டும் தான் செய்கிறது. அது மட்டும் அல்ல. இன்றைக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது அற்புதமான ஆட்சி நடத்தினார். அவர் ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக பொறுபேற்றபோது மூன்று மாதத்தில் ஆட்சி போய்விடும், நான்கு மாதத்தில் போய்விடும், 5 மாதத்தில் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் அவர் நான்கு ஆண்டுகளும், மூன்று மாதங்களும் அற்புதமான ஆட்சி தந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்தார்.
7.5% யாராலும் நினைத்து பார்க்க முடியுமா? இன்றைக்கு 600 மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். அதுமட்டுமல்ல 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தந்தவர். அதிகமான திட்டங்களை கொண்டு வந்து கொடுத்தார். ஒரே முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடியை வாங்கிக் கொடுத்தவர். ஆனால், மதுரை -கோவைக்கு மெட்ரோ ரயிலுக்கு சாதாரண ஃபைலைக்கூட திமுகவுக்கு அனுப்பத் தெரியவில்லை. ஆனால் எடப்பாடியார் முதலமைச்சராக வந்ததும் அந்த இரண்டு திட்டங்களையும் கொண்டுவருவார். அதைத்தான் இன்று பொதுக்குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகையால் இன்றைக்கு யாரும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவது உறுதி. நம்முடைய பணியை நாம் சிறப்பான முறையில் செய்ய வேண்டும். நீங்கள் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், அம்மையார் ஜெயலலிதாவையும் முதலமைச்சராக உருவாக்கினீர்கள். அதேபோல இந்த 2026 மிக முக்கியமான தேர்தல். மீண்டும் நீங்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக்க வேண்டும். இங்கே திமுக எஸ்ஐஆரை எதிர்ப்பது போல் எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் குடும்பத்தில் ஓட்டு இருக்கிறதா? என்பதை பாருங்கள். எங்கள் மாவட்டத்தில் ஒரு நகர செயலாளரின் குடும்பத்தில் ஐந்து ஓட்டு. அவர் குடும்பத்திலேயே இல்லை.

திமுகவுக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. யாருமே திமுகவுக்கு ஓட்டுப் போடப்போவதில்லை. ஆனால், திமுககாரன் கடைசி வரையில் பூத்தில் இரண்டு பேர் இருந்தாலும், கடைசிவரை பூத்தில் போய் அந்த வேலைகளை செய்வான். நாம் 50 பேர் இருப்போம். கண்டிப்பாக நாம் ஆட்சி வந்து விடுவோம், நாம் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம், எடப்பாடியார்தான் முதலமைச்சர் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனாலும், நம்முடைய பணிகளை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். 2021ல் நாம் தான் ஆட்சிக்கு வர வேண்டியது. யாரும் திமுக வரவேண்டும் என்று ஓட்டு போடவில்லை. மூன்று சதவீதம் கூட கிடையாது, கடைசியாக பார்த்தால் ஒன்றரை சதவிகிதத்தில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அதேபோல் பார்த்தீர்களென்றால் இன்றைக்கு நம்முடைய பணிகளை கண்டிப்பாக சிறப்பாக செய்ய வேண்டும்.

இந்த ஒரு மாதம் நமது வாக்குகள், நமது குடும்ப வாக்குகள், நமது அதிமுக ஓட்டுகள், பொது மக்களுடைய ஓட்டுகள் எல்லாவற்றையும் நாம் கவனமாக பார்க்க வேண்டும். அது முக்கியமான பணி. கண்டிப்பாக எதிர்பார்க்கக் கூடிய கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார். யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. பத்திரிகை ஊடகங்கள் நம்மைப்பற்றித்தான் பேசுகின்றன. நம்மைப் பற்றி பேசினால் தான் அனைவரும் பார்க்கிறார்கள். அத்தனை பேரும் நம்மைப் பற்றி தான் பேசுகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. நம்முடைய பணி அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எந்த மக்களும் இன்று திமுகவுக்கு ஓட்டு போடத் தயாராக இல்லை. திமுகவுக்கு எப்போதும் வாக்களிக்கக்கூடிய அரசு ஊழியர்கள் கூட இன்று அதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஆகையால் கண்டிப்பாக, உறுதியாக எது நடக்கிறது இல்லையோ... எடப்பாடியார் 2026- ல் முதலமைச்சராக வருவார்’’ எனப்பேசினார்.
