தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது: திருமாவளவன் விளக்கம்
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும், பணி நிரந்தரம் என்பது சமூகநீதிக்கு முரணானது என்று அவர் விளக்கமளித்தார்.

பணி நிரந்தரம் செய்யக்கூடாது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று அவர் பேசியிருப்பதுபுதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற தமது பிறந்தநாள் விழாவில், அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் சேகர் பாபு, இயக்குநர் பாக்யராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திருமாவளவனின் பேச்சு
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக தி.மு.க. அரசுக்கு எதிராகப் போராடவில்லை என தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.
அவர் போராட்டக்களத்திற்குச் சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்றதாகவும், 13 நாட்களாக அமைச்சர்கள் மற்றும் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேசியதாகவும் தெரிவித்தார்.
ஏன் பணி நிரந்தரம் செய்யக்கூடாது?
"போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நான் ஆதரிக்கிறேன். ஆனால், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, நீங்கள் காலம் முழுவதும் அதையே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயம் அல்ல" என்று திருமாவளவன் கூறினார்.
குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.பணி நிரந்தரம் செய்வது என்பது, "குப்பையை அள்ளுபவர்களே காலம் முழுவதும் அள்ளட்டும்" என்ற கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
இது சமூகநீதிக்கு முரணானது. எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதே சரியான நிலைப்பாடு என்று அவர் விளக்கமளித்தார்.
சாதி புத்தியை விமர்சித்த திருமா
"தலித் பிரச்சினை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி" என்று அவர் கடுமையாக விமர்சித்தார். "அதிமுக போன்ற கட்சிகள் ஏன் பேசக் கூடாது? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்கு முதலில் களத்திற்குச் சென்றது நான்தான் என்றும், ஆனால் பிரச்சினை என்னவென்று தெரியாதவர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிவசப்படாமல், கருத்தியலில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.