- Home
- Tamil Nadu News
- Cholagangam Lake: கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய சோழகங்கம் ஏரி என்ன ஆனது? இன்றைய நிலை என்ன தெரியுமா?
Cholagangam Lake: கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய சோழகங்கம் ஏரி என்ன ஆனது? இன்றைய நிலை என்ன தெரியுமா?
ராஜேந்திர சோழன் தான் நிர்மாணித்த புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டுவதற்கும், குடிநீர் ஆதாரமாகவும் ஒரு பிரம்மாண்ட ஏரியை உருவாக்கினார். அந்த ஏரியின் தற்போதைய நிலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைநகரை மாற்றிய ராஜேந்திர சோழன்
அரசர்கள் தாங்கள் புதிய நகரத்தை உருவாக்கும் பொழுது அந்த நகரம் ஆற்றங்கரையில் இருப்பதை உறுதி செய்து கொள்வர் அல்லது நகரம் அமைக்கும் போது வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பதை உறுதி செய்து கொள்வர். கங்கையை வென்ற பின்னர் ராஜேந்திர சோழன் நீர்வளம் மிக்க தஞ்சையை விட்டுவிட்டு அங்கிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரை உருவாக்கினார். தனது புதிய தலைநகருக்கு நீர் ஆதாரம் வேண்டும் என்று அவர் உருவாக்கியது தான் சோழகங்கம் ஏரி. தான் நிர்மாணித்த இந்த தலைநகரத்தில் தஞ்சையில் இருப்பது போன்றே மிகப்பெரிய அரண்மனை ஒன்றையும், தஞ்சை பெரிய கோயிலைப் போலவே கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்ற கோயிலையும் கட்டினார்.
சோழகங்கம் ஏரி உருவாக்கம்
அகழிகள், கோட்டைச் சுவர்களுடன் கூடிய இந்த நகரம் 1900 மீட்டர் நீளமும், 1350 மீட்டர் அகலம் உடையதுமாக இருந்தது. ஆனால் இந்த பகுதி தஞ்சாவூரைப் போல நீர்வளம் மிகுந்ததாக இல்லை. எனவே இந்த நகருக்கு என ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்க ராஜேந்திர சோழன் முடிவெடுத்தார். இந்த ஏரி கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு ‘சோழகங்கம்’ என பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி என குறிப்பிடப்படுகிறது. ஏரி கட்டப்பட்டபோது கரைகள் தெற்கு வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் சுமார் நான்கு மைல் அகலத்திற்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வருவது எப்படி என பலரும் யோசித்த நிலையில், கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டி ஏரிக்கு நீர் கொண்டுவந்து ராஜேந்திர சோழன் சாதித்து காட்டினார்.
கங்கை வெற்றியின் நினைவாக கட்டப்பட்ட ஏரி
இந்த மிகப்பெரிய ஏரியின் வடிகால் தான் தற்போது மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியாக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வடிகாலாக இருந்த வீராணம் ஏரியே இவ்வளவு பெரியதாக இருந்தால், அதன் மூல ஏரியான சோழகங்கம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். கங்கை மன்னனை வென்றதை குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு ‘கங்கா ஜலஸ்தம்பம்’ அதாவது ‘நீர் மயமான வெற்றித் தூண்’ என குறிப்பிட்டுள்ளனர். இது திருவேலங்காடு செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகளில் காணப்படுகிறது. திருவேலங்காடு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124 வது வரியின் தமிழாக்கத்தின்படி, “தனது மண்டலத்தில் சோழகங்கம் என்ற பெயருடைய கங்கா நீரால் ஆன ஜல ஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்” என கூறப்படுகிறது.
கொள்ளிட்டத்தில் இருந்து ஏரிக்கு வந்த நீர்
வரலாற்று நூல்களை ஆய்ந்து பார்க்கும் பொழுது, உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு தெற்காக 16 மைல் தூரத்திற்கு ஒரு கரை இருந்ததாகவும், இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருந்ததாகவும், முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாக தண்ணீர் வந்துள்ளது. 60 மைல் நீளமுள்ள இந்த கால்வாய் அதனுடைய தென்கோடியில் இந்த ஏரிக்குள் நுழைந்துள்ளது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர் வரத்து வழியாகும். அதேபோல் ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரை இங்கே கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகளும் இன்றும் உள்ளன. சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்புகளில் இந்த ஏரி பாழடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 170 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இன்னும் ஏரி பாழடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.
வறண்ட பூமியாக மாறிப்போன சோழகங்கம் ஏரி
சோழகங்கம் ஏரியானது கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றி இருந்த விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியது. இதனால் வறண்ட பூமியாக காணப்பட்ட அந்த பகுதிகள் செழிப்பானதாக மாறியது. இந்த ஏரி நகரத்தின் அகழிகள், அரண்மனைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் நீர் வழங்கியது. சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு காலம் செல்ல செல்ல சோழகங்கம் ஏரி தனது முக்கியத்துவத்தை இழந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாலைகள் அமைப்பதற்காக ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டது போன்றவை இதன் நிலையை மேலும் மோசமாக்கின. அசல் அளவோடு ஒப்பிடும்பொழுது சோழகங்கம் ஏரி இன்று மிகவும் சுருங்கிவிட்டது. பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களாகவோ அல்லது பிற பயன்பாடுகளுக்காகவோ இந்த ஏரி மாற்றப்பட்டுவிட்டது. இப்போது பொன்னேரி என்ற பெயரில் அறியப்படுகிறது.
ஏரியை சீரமைக்க முடிவெடுத்த முதலமைச்சர்
ஏரிக்கு நீர் கொண்டு வந்த கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் கூட முழுமையாக நீர் வருவது தடைபடுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி தூர்ந்து போய், ஆழம் குறைந்து, நீர் பிடிப்புத் திறன் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. ஏரியின் அளவு குறைந்து விட்டதால் நீர் வரத்து குறைந்து, பாசனப் பரப்புகளும் வெகுவாக குறைந்து விட்டன. அண்மையில் இந்த ஏரியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு மீண்டும் உயிரூட்ட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஜூலை 23, 2025 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சோழகங்கம் ஏரியை ரூ.19.2 கோடி மதிப்பில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், பார்வையாளர் வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவித்துள்ளார். மேலும் ராஜேந்திர சோழனுக்கு ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழகங்கம் ஏரி ஒரு பொறியியல் அற்புதம்
ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த கால்வாயை புதுப்பித்தால் மீண்டும் கொள்ளிடத்தில் மூலம் நீரை இந்த ஏரிக்கு நிரப்ப முடியும் என்று கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் நிறுவன அறங்காவலரான கோமகன் தெரிவித்துள்ளார். இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்று கூறியுள்ள அவர், ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டல் மண்ணை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்ததாகவும், இதில் சேரும் வண்டல் மண்கள் பிறகு சேறோடும் துளை வழியாகவும், நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர், வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும். ஆனால் இப்போது இந்த ஏரியின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. 1855 ஆம் ஆண்டு வெளிவந்த தகவல்களின்படி, இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏரி அதற்கு முன்பே அழிந்து போய் இருக்கலாம் என்று கோமகன் விளக்கி இருக்கிறார்.
ஏரியை பாதுக்காக்க வேண்டியது நமது கடமை
முதல்வரின் இந்த சோழகங்கம் ஏரி சீரமைப்பு திட்டம் வரவேற்கப்பட்டாலும், ஏரியை முழுமையாக தூர்வாரி சீரமைக்க ரூ.663 கோடி செலவாகும் என்று தமிழக அரசின் நீர்வளத்துறை மதிப்பிட்டுள்ளது. ரூ.19.2 கோடி மட்டும் ஒதுங்கப்பட்டுள்ளதால் இந்த நிதி போதுமானதா? என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை புரிந்த நிலையில், இந்த ஏரியின் மேம்பாட்டு திட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது. சோழகங்கம் ஏறி வெறும் நீர்நிலை மட்டுமல்ல. அது சோழப் பேரரசின் நீர் மேலாண்மை திறனுக்கும், ராஜேந்திர சோழனின் தொலைநோக்கு சிந்தனைக்கும் ஒரு சான்றாகும். இந்த நவீன காலத்தில், இந்த பண்டைய நீர் பாசன அமைப்பிற்கு மீண்டும் உயிரூட்டி அதன் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான ஒன்றாகும்.