- Home
- Spiritual
- Gangaikonda Cholapuram: தலையில் கங்கை நீரை சுமந்து வந்த வட இந்திய மன்னர்கள்..! கங்கை கொண்ட சோழபுரம் உருவான வீர வரலாறு.!
Gangaikonda Cholapuram: தலையில் கங்கை நீரை சுமந்து வந்த வட இந்திய மன்னர்கள்..! கங்கை கொண்ட சோழபுரம் உருவான வீர வரலாறு.!
பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்தும் ,அதை கட்டிய ராஜேந்திர சோழன் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சோழப்பேரரசின் மகத்தான அரசன் ராஜேந்திர சோழன்
ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் சோழப்பேரரசின் மிக முக்கியமான மற்றும் வலிமை வாய்ந்த மன்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தன் தந்தை ராஜராஜ சோழன் தொடங்கி வைத்த சோழ சாம்ராஜ்யத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றவரும் அவரே. அவர் ஆட்சியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அவர் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரமாகும். ராஜராஜன் சோழன் தஞ்சாவூரில் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலயத்தை போலவே கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தை ராஜேந்திர சோழன் எழுப்பினார். இவர் இந்த ஆலயத்தை எழுப்பியதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வட இந்திய படையெடுப்பு
ராஜேந்திர சோழன் ராஜராஜ சோழனின் மகனும் அவருக்குப் பிறகு சோழப்பேரரசை ஆண்டவரும் ஆவார். ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்திலேயே பொ.ஆ 1012-ல் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று தொடங்கி பொ.ஆ 1044 வரை சோழப்பேரரசை ஆண்ட மன்னனாக விளங்கினார். தனது தந்தையின் போர்களில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றியை தேடித் தந்தார். ராஜேந்திர சோழனின் மிக முக்கியமானதும், உலகையே திரும்பி பார்க்க வைத்த சாதனை அவர் வட இந்தியாவை வெற்றி பெற்றதுதான். வட இந்தியாவை நோக்கி படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற முதல் தென்னிந்திய அரசன் என்கிற பெருமையை ராஜேந்திர சோழன் பெற்றார். பொ.ஆ 1019 இல் தனது படைகளை கங்கை நதிக்கு வடக்கே அனுப்பி பாலப் பேரரசன் மன்னன் மஹிபாலனை தோற்கடித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் நிர்மானம்
போரில் தோற்ற மன்னர்களின் தலையில் கங்கை நீரை சுமந்து வரச் செய்து இந்த கோயிலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ளது. பொ.ஆ.1020 இல் கட்டத்தொடங்கி பொ.ஆ 1035 இல் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. சுமார் 250 ஆண்டுகள் பிற்காலச் சோழப் பேரரசின் தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் விளங்கியது. தஞ்சை பெரிய கோயிலின் நீட்சியாகவும் திராவிட கட்டிடக்கலை பாணியிலும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சை கோயிலில் இருந்து சில அம்சங்களில் இந்த கோயில் வேறுபடுகிறது. தஞ்சை பெரிய கோயில் நேர்த்தியான கம்பீரமான நேர்கோடுகளை கொண்டிருக்க கங்கைகொண்ட சோழபுரம் சற்று வளைந்த மென்மையான கோபுர அமைப்பை கொண்டுள்ளது. இது பெண்மையின் மென்மையை குறிப்பதாக கருதப்படுகிறது. இக்கோயிலின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பிரம்மாண்டமான லிங்கமாகும். இது தமிழ்நாட்டிலேயே உயரமான லிங்கமாக கருதப்படுகிறது. இதன் உயரம் சுமார் 13.5 அடி, சுற்றளவு 60 அடி ஆகும்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பம்சங்கள்
இந்த லிங்கத்தின் அடியில் சந்திர காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளதாகவும், அது கோடையில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் தருவதாக கூறப்படுகிறது. ராஜேந்திர சோழன் தனது கங்கை வெற்றியை நினைவாக கங்கையிலிருந்து கொண்டு வந்த புனித நீரை கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் ஊற்றினார். இந்த கிணறு சிம்மக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. சிங்கத்தின் வாயிலிருந்து நீர் வருவது போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால் இக்கிணறு இந்த பெயர் பெற்றது. கிணற்றின் வழியாக படிகளும், சுரங்கப்பாதைகளும் உள்ளன. இது ராஜேந்திரனின் படைப்புத் திறனுக்கும், நீர் மேலாண்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிறுமியின் வடிவில், சிரித்த முகத்துடன், 20 திருக்கரங்களுடன் மகிஷாசுரனை வரம் செய்யும் கோலத்தில் துர்க்கை அருள் பாலிக்கிறார். ராஜேந்திர சோழன் சிவனை வழிபடுவதற்கு முன்பு துர்க்கையை வணங்கியதாகவும், இந்த துர்க்கை ராஜேந்திரனின் குலதெய்வம் என்றும் நம்பப்படுகிறது.
கடல் கடந்து வென்ற ராஜேந்திர சோழன்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராதீஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்கள் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் “மாபெரும் வாழும் சோழர் கோவில்கள்” என உலக பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் நிலப்பரப்பை ஆண்ட மன்னனாக மட்டுமல்லாமல் வலிமையான கடற்ப்படையும் கொண்டிருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஸ்ரீவிஜயம் (இன்றைய இந்தோனேசியா, மலேசியா), கடாரம் (இன்றைய கெடா), கம்போடியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் மீதும் போர் தொடுத்து வெற்றியடைந்தார். இதன் மூலம் வங்காள விரிகுடா முழுவதும் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. வங்காள விரிகுடா கடலானது “சோழர்களின் ஏரி” என்று அழைக்கப்பட்டது. இந்த வெற்றிகள் சோழர்களின் கடல் வணிகத்தையும், பண்பாட்டு தொடர்புகளையும் பலப்படுத்தின. இதன் காரணமாக ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டங்களும் உண்டு.
தலைசிறந்த மன்னனாக விளங்கிய ராஜேந்திர சோழன்
தனது தந்தையைப் போலவே நிர்வாகத்திலும் சிறந்தவராக ராஜேந்திர சோழன் விளங்கினார். நில அளவை, வரிவிதிப்பு, நீர் மேலாண்மை, சோழகங்கம் முதலான ஏரிகள் வடிவமைப்பு, நீதி முறை போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சியில் அமைதி நிலவியது. பொருளாதாரம் செழித்தது. கலை மற்றும் கட்டிடக்கலை பெருமளவில் வளர்ச்சி பெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் அவரது கட்டிடக்கலை ஆர்வத்திற்கும், சைவ சமயம் மீது அவர் கொண்ட பற்றுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது தந்தை ராஜராஜ சோழன் தஞ்சையில் எழுப்பிய பிரகதீஸ்வரர் ஆலயத்தை போலவே கட்ட வேண்டும் என்கிற ஆவல் கொண்டதன் வெளிப்பாடே கங்கைகொண்ட சோழபுரத்தின் சோழீஸ்வரர் கோயில் உருவாகக் காரணமாகும்.
கம்பீரமாக நிற்கும் கங்கைகொண்ட சோழபுரம்
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் “சோழர் பேரரசின் பொற்காலம்” என்று கருதப்படுகிறது. அவர் ஒரு மாபெரும் போர் வீரராகவும், நிர்வாகியாகவும், கலையை ஆதரிப்பவராகவும் திகழ்ந்தார். கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அவரது வெற்றிகளுக்கும், கலை மீதான அவரது ஈடுபாட்டிற்கும் நிலையான அடையாளமாக இன்றும் கம்பீரமாக திகழ்ந்து வருகிறது.