- Home
- Spiritual
- Kanjamalai Siddhar Temple : சித்தரே இறைவனாய் காட்சி தரும், தீராத தோல் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோயில்.!
Kanjamalai Siddhar Temple : சித்தரே இறைவனாய் காட்சி தரும், தீராத தோல் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோயில்.!
தமிழகம் ஆன்மீக பூமிக்கு பெயர் பெற்ற ஒரு நிலப்பரப்பாகும். இங்கு பல அதிசயமான கோயில்கள் உள்ளன. அந்த வகையில் தீராத தோல் நோய்களை தீர்க்கும் ஒரு அற்புதமான கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Kanjamalai Kalanginathar Siddhar Temple
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இயற்கை எழில் கொஞ்சும் கஞ்சமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கஞ்சமலை சித்தர் கோயில். இந்த மலையானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்தர்கள் வாழ்ந்து, அரிய மூலிகைகளை ஆராய்ந்து, அற்புதங்களை நிகழ்த்திய புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கராபுரநாதர் புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருக்கோயில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையானது எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் அற்புதங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மூலிகைகள் நிறைந்த கஞ்சமலை
கஞ்சம் என்ற சொல்லுக்கு இரும்பு, தாமரை, தங்கம் என்று மூன்று பொருட்கள் உண்டு. பராந்தகச் சோழன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் வேய்ந்தது கஞ்சமலையில் கிடைத்த தங்கத்தை கொண்டு தான் என நம்பப்படுகிறது. இந்த மலையில் உயர்தர இரும்பு தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புருஷோத்தம மன்னன் மாவீரன் அலெக்சாண்டருக்கு பரிசளித்த வாளானது கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. அதே போல் கஞ்சமலை மூலிகை வளம் கொண்டதாக கருதப்படுகிறது. கருநெல்லி போன்ற அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கப்படுகின்றன. கருநெல்லி நரை, திரை, மூப்பு நீக்கும் சாகா மருந்தென்றும் அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்கியதற்கு கஞ்சமலை மூலிகையை காரணம் என்றும் நம்பப்படுகிறது.
காலாங்கிநாதரின் வரலாறு
இந்த மலையில் ஓடும் ஓடை சித்தர்கள் பாஷாணம் செய்ய பயன்படுத்தியதால் ‘பொன்னி ஓடை’ என்று பெயர் பெற்றது. கஞ்சமலை கோயிலின் மூலவர் காலாங்கிநாதர் ஆவார். இவர் திருமூலரின் ஏழு சீடர்களில் ஒருவர். முதுமையைப் போக்கில் இளமையை தரக்கூடிய மூலிகைகள் கஞ்சமலையில் இருப்பதை அறிந்த திருமூலர், தனது சீடரான காலாங்கி நாதருடன் இங்கு வந்து தங்கி ஆய்வுகள் மேற்கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. திருமூலர் சஞ்சீவி மூலிகை தேடிச்சந்திருந்த போது காலங்கிநாதர் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது சோறு பொங்கி வழிந்ததால் அருகில் இருந்த ஒரு செடியின் குச்சியால் அதை கிளறினாராம். அப்போது அந்த சோறு கருமை நிறமாக மாறி உள்ளது.
திருமூலர் அருளிய வரம்
சோறு கெட்டு விட்டதாக எண்ணிய காலாங்கிநாதர் அதை தான் உண்டு விட்டு, திருமூலருக்கு வேறு உணவை சமைத்துள்ளார். அந்த சோற்றை உண்ட பின் காலங்கிநாதரின் உடல் நரை, திரை, மூப்பு நீங்கி இளமையான சிறு பிள்ளை போல் மாறியது. திருமூலர் திரும்பி வந்தபோது தனது சீடரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் திகைத்துள்ளார். நடந்ததை கேட்டறிந்த திருமூலர் அந்தச் செடியின் மகிமையை உணர்ந்து இளமையாக மாறிய காலங்கிநாதரை மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த மலையிலேயே தங்கமாறு அருளினார். காலாங்கிநாதரும் சிறு பிள்ளையாக மாறி தவக்கோலத்தில் காட்சி அளித்தார். மக்கள் அவரை சித்தேஸ்வர சுவாமி என வணங்கி கோயில் கட்டினர். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீர ஆசன நிலையில் சித்தேஸ்வர சுவாமி இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.
தீராத நோய்களை தீர்க்கும் தலம்
தமிழகத்தில் சித்தரே இறைவனாக இருந்து அருள் பாலிக்கும் கோயில்களில் கஞ்சமலை சித்தர் கோயிலும் ஒன்று. இந்த கோயிலின் சித்தேஸ்வர ஸ்வாமியை வழிபடுபவர்களுக்கு தங்கள் குறைகள் நீங்கி நோய்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. மூலிகைகள் நிறைந்த இந்த கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை குடித்தால் தோல் நோய்கள், சரும பிரச்சனைகள், நீண்டகால நோய்கள் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது. அமாவாசை போன்ற சிறப்பு தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 18 கிலோமீட்டர் மலையை சுற்றி பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வரும் பொழுது இங்கு வரும் மூலிகைகளின் காற்று பட்டு பல நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது. திருக்கோயிலை சுற்றி 7 தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மூலிகைகள் நிறைந்துள்ளது.
கஞ்சமலை எங்குள்ளது?
பக்தர்கள் இந்த குளங்களில் புனித நீராடி சித்தேஸ்வர சுவாமியை தரிசிப்பது வழக்கம். இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள குன்று ஒன்றில் குழந்தை ரூபத்திலான பாலமுருகனுக்கும் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு கிழக்கே உள்ள சிறிய மலை தியான மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு சந்தன மகாலிங்க சுவாமி காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் இந்த தியான பாறையில் சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்வதாக நம்பப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இளம்பிள்ளை செல்லும் வழியில் மூடுதுறை, முருங்கப்பட்டு கிராமங்களுக்கு தெற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஞ்சமலை சித்தர் கோயில் அமைந்துள்ளது.
கஞ்சமலைக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் இந்த கோயிலின் நடை திறந்திருக்கும். இந்த கோயில் ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்தது மட்டுமல்ல. இயற்கை அழகு மற்றும் வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சித்தர்களின் அருளையும், இயற்கை அன்னையின் வரங்களையும், மூலிகை செடியின் மகத்துவத்தையும் ஒருசேர பெற்று பக்தர்களுக்கு அமைதியும், ஆரோக்கியத்தையும் அருளும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. அடுத்த முறை சேலத்திற்கு செல்லும் பொழுது இந்த அற்புத கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசித்து சித்தர்களின் அருளை பரிபூரணமாக பெறுங்கள்.