- Home
- Tamil Nadu News
- எங்களுக்கும் தன்மானம் உண்டு.. திருப்பி அடிப்போம்.. திமுகவை விடாமல் துரத்தும் மாணிக்கம் தாகூர்!
எங்களுக்கும் தன்மானம் உண்டு.. திருப்பி அடிப்போம்.. திமுகவை விடாமல் துரத்தும் மாணிக்கம் தாகூர்!
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்துகிற செயலை செய்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது.

திமுக, காங்கிரஸ் மோதல்
சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதி வேண்டும் என காங்கிரஸ் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்து வருகிறது.
பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்
மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, ''மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ்காரர்கள் அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து அவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு 3,0000, 4,000 ஓட்டுகள் தான் உள்ளது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்.'' என்றார்.
எங்களுக்கு தன்மானம் முக்கியம்
இந்த நிலையில் காங்கிரசுக்கும் தம்மானம் உண்டு; நாங்களும் திருப்பி அடிப்போம் என்று மாணிக்கம் தாகூர் தளபதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சட்டப்பேரவை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இது தொடர்பாக தேசிய தலைவரை சந்தித்து பேசினேன். என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ யாரெல்லாம் இழிவாக பேசுகிறார்களோ அவர்களிடம் எந்தவித தயவு தாட்சணியம் பார்ப்பதற்கு இல்லை. எங்களைப் பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிக முக்கியமானது. காங்கிரஸ் கட்சிக்காரரின் தன்மானம் மிக முக்கியமானது.
அமைப்பு ரீதியாக காங்கிரஸ் பலம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதோ அவமதிப்பதையோ எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைப்பு ரீதியாக தற்போது பலம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
செல்வபெருந்தகையின் அறிக்கை தான் காங்கிரஸ் கட்சியின் நிலை. அவதூறாக பேசியிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வபெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் சீட் கிடைக்குமா?
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்துகிற செயலை செய்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரின் கோரிக்கையாக உள்ளது. எனக்கும் சகோதரி ஜோதிமணிக்கும் சீட்டு கிடைப்பது காங்கிரஸ் தலைமை முடிவெடுக்க வேண்டிய விஷயம். பூத் வார்டுகளில் கூட காங்கிரஸ் நிர்வாகிகள் இல்லை என்பது வன்மமான பேச்சு. அந்த வன்மத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவானது
இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்திய மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பு சகோதரர் விஷ்ணு பிரசாத் அதற்காக கடிதம் எழுதி தமிழக முதல்வரிடமும், நகர்ப்புற அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று கூறியுள்ளார்.
