- Home
- Tamil Nadu News
- கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நபர்கள்.. மாணிக்கம் தாகூரை மறைமுகமாக விளாசிய ஸ்டாலின்!
கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நபர்கள்.. மாணிக்கம் தாகூரை மறைமுகமாக விளாசிய ஸ்டாலின்!
களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ ஆணவமோ அதிருப்தியோ வெளிப்படக் கூடாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், திருச்சியில் மார்ச் 8ம் தேதி பிரம்மாண்ட மாநாட்டு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்பு பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ''பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லாரும் ரெஸ்ட் இல்லாமல் தேர்தல் பணிக்குத் தயாராக வேண்டும். இன்றைய ஆளுநர் உரையில் நாம் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக சொல்லியிருக்கிறோம்.
எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள்
இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாலதான் எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகளே திண்டாடுகிறார்கள். உண்மையான பிரச்சினைகள் பெரிதாக இல்லாததால், வீண் அவதூறுகளைப் பரப்பி, மக்களை குழப்ப நினைக்குறாங்க.
அதுக்கு நாம் துளிகூட இடம் கொடுத்து விடக் கூடாது. அதனால்தான், நம் சாதனைகளை எல்லாம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்
நம் அரசின் திட்டங்களால் சுமார் 2 கோடி மக்கள் பயனடைகிறார்கள். அந்த பயனாளிகள் எல்லோரையும், இனிமேல் நம்மோட வாக்காளர்களாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு, உங்களிடம்தான் உள்ளது. நல்லா கேட்டுக்குங்க... தேர்தல் நெருங்கிடுச்சு.
இனி நம் சிந்தனை செயல் எல்லாத்துலயும் வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். இங்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லாரும் இருக்கீங்க. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். "தேர்தல் வருது நடவடிக்கை எடுக்கமாட்டார்"-னு மட்டும் நினைக்காதீங்க. தனிநபர்களை விட கட்சிதான் பெரிது.
தோழமைக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர்
அதேமாதிரி, எல்லாரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். களத்தில் மக்கள் ஏதாவது குற்றம் குறைகளைச் சொன்னால் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறிகூட, கோபமோ ஆணவமோ அதிருப்தியோ வெளிப்படக் கூடாது.
அதே போல, நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் தேவையில்லாத கருத்துகளைப் பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகிடக் கூடாது.
உட்கட்சி பிரச்சினைகள் வரக்கூடாது
தெளிவாகச் சொல்கிறேன். கூட்டணி தொகுதி பங்கீடு இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் நான்தான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பைக் கொடுத்து களப்பணி ஆற்ற வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள். உட்கட்சி பிரச்சினைகள் எதுவும் எழக் கூடாது. எல்லோரையும் அரவணைத்துப் போக வேண்டிய பொறுப்புகளில் இங்க இருக்கும் எல்லாரும் இருக்கிறீர்கள்.
வலிமையான கட்சியாக இருக்க வேண்டும்
இந்தியாவிலேயே ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, ரொம்ப உறுதியாக, வலிமையாக இருப்பது நாமதான்-னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால் நம்மை எப்படியாவது வீழ்த்திட பல சதித் திட்டங்கள் நடக்கும்.
அது எல்லாத்தையும் திமுக தொடர்ந்து உடைத்து, ஒரு வலிமையான கட்சியாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த 3 மாதத்துக்கு உங்கள் உழைப்பு, பொறுமை எல்லாம் ரொம்ப முக்கியம். உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நம்மை நம்பித்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூரை அட்டாக் செய்த முதல்வர்
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். திமுகவின் ஐடி விங்கை சில்லறை ஐடி விங் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவரை குறிப்பிட்டு தான் நம் தோழமைக் கட்சிகளில், நம்மை பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

