திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள அணைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் வெளியிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு மாமல்லன் என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல்
பின்பு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் அமைவது பழந்தமிழர் மரபு. அனைத்து வகையிலும், இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதன் தொடர்ச்சியாகதான் நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபெற்று வருகிறது என்பதன் அடையாளம்தான், இந்த மாமல்லன் நீர்த்தேக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சிகளில் கட்டப்பட்ட அணைகள்
சென்னையின் வளர்ந்து வருகின்ற பகுதிகளுக்காக நம்முடைய அரசு செய்த முக்கியமான பணியாக வரலாற்றில், இந்த நிகழ்வு நினைவுகூரப்படும். பொதுவாக, சிலர் உண்மை தெரிந்தும், பலர் உண்மை தெரியாமலும், 'நம்முடைய கழக ஆட்சியில், அணைகளை கட்டவில்லை' என்று ஒரு பொய்யை சொல்லுவார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? நம்முடைய முத்தமிழிலும் கரைகண்ட தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் நீர் நிலைகளைக் காக்கக்கூடிய செயல்பாடுகளையும் அதிகமாக செய்திருக்கிறார்.
43 அணைகள் கட்டப்பட்டுள்ளன
1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 2011 வரை தமிழ்நாட்டில், 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதைப் பட்டியலோடு பெயர்களோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால் உப்பாறு,
சிற்றாறு 1, சிற்றாறு 2, பெருவாரிப்பள்ளம், சோலையாறு, பொன்னணியாறு, கருப்பாநதி, இராமநதி, பரப்பலாறு, மேல்நீராறு, பிளவக்கல் கோவிலாறு, பிளவக்கல் பெரியாறு, குடகணாறு, பாலாறு பொருந்தலாறு, குண்டேரிப்பள்ளம், வரதமாநதி, வட்டமலைகரை ஓடை, மருதாநதி, வரட்டுப்பள்ளம்,
குண்டாறு, அடவிநயினார்
கீழ்நீராறு, குண்டாறு, குதிரையாறு, ஆணைக்குட்டம், இராஜாத்தோப்பு, சோத்துப்பாறை, மோர்தானா நீர்த்தேக்கம், அடவி நயினார், பொய்கையாறு, வடக்கு பச்சையாறு, சாஸ்தா கோவில், கடனா நதி, நம்பியாறு, சண்முகா நதி, மிருகண்டா நதி, கமண்டல நதி, வண்டல் ஓடை, ஆண்டியப்பனூர், நல்லதங்காள், நங்கஞ்சியாறு, சிறுமலையாறு, இருக்கன்குடி, குப்பநத்தம், மாம்பழத்துறை ஆறு என 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.
உபரி நீர் கடலில் கலக்காமல் புதிய நீர்த்தேக்கம்
மானாமதி குழும 69 ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் கடலில் கலக்காமல், மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது. திருவிடந்தை முதல் கோகிலமேடு வரை 5 ஆயிரத்து 161 ஏக்கர் பரப்பளவில் இது அமையப் போகிறது. மொத்தம் 1.65 டி.எம்.சி. கொள்ளளவில், 34 கிலோமீட்டர் நீளமுள்ள கரை மற்றும் நீர் ஒழுங்கியத்துடன் கூடிய புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கலாம்
இந்தத் திட்டத்தின் வாயிலாக, நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை நம்மால் மக்களுக்கு வழங்க முடியும். சென்னையின் உருவெடுத்திருக்கின்ற புதிய அடையாளங்களாக, மிக வேகமாக பகுதிகளான சோழிங்கநல்லூர், மேடவாக்கம். பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற 13 இலட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இது பயன்படும்'' என்று தெரிவித்துள்ளார்.


