- Home
- Tamil Nadu News
- வெளிநாட்டு பயணம் மாபெரும் சக்சஸ்..! சென்னையில் கால் வைத்ததும் பூரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
வெளிநாட்டு பயணம் மாபெரும் சக்சஸ்..! சென்னையில் கால் வைத்ததும் பூரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்ற வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலீட்டுக்கான பயணம் சக்சஸ்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30ம் தேதி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துர்கா ஸ்டாலின் உட்பட சில முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.
புதிதாக வரும் 10 நிறுவனங்கள்
இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்ட ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. புதிதாக 10 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து உள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்துவரும் 17 நிறுவனங்கள் தங்கள் நிறுவன விரிவாக்கத்திற்கு உறுதி அளித்துள்ளன.
ரூ.15,516 கோடி முதலீடு
தமிழகத்தை நோக்கி நிறைய முதலீடுகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முதலீடுகளை தாண்டி நல்லுறவுக்காக ஒன்று கூடிய தருணமாக இந்த பயணம் அமைந்தது. ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு
இந்த வெளிநாட்டுப் பயணங்களும், இங்கு மேற்கொள்ளும் பயணங்களும் ஒருபோதும் நிற்காது, தொடரும். தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் தமிழகம் முதலிடத்தை நோக்கியே செல்கிறது. முழு மனநிறைவுடன் தாயகம் வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.