- Home
- உலகம்
- ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் புதிய வரலாறு படைத்த ஸ்டாலின்: பெரியாரின் பேரன் நான்..! முதல்வர் கம்பீர பேச்சு
ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் புதிய வரலாறு படைத்த ஸ்டாலின்: பெரியாரின் பேரன் நான்..! முதல்வர் கம்பீர பேச்சு
புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மாநாட்டில் (Self-Respect Movement and its Legacies Conference 2025) கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில், அவர் பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, இரண்டு நூல்களை வெளியிட்டார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஸ்டாலின் தனது உரையில், பெரியாரின் சிந்தனைகள் உலகளாவிய பொருத்தம் கொண்டவை என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறள் கொள்கையை மேற்கோள் காட்டி, பெரியாரின் கொள்கைகள் சாதி, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவை மற்றும் உலக மக்களுக்கு பொதுவானவை என்று வலியுறுத்தினார். பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை இயக்கம் உலகமயமாக்கப்படுவதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாருக்கும் எல்லாம்
மேலும் அவர் பேசுகையில், “இந்த ஆட்சி அமைந்தபோது இது ஒரு கட்சியின் ஆட்சியல்ல; ஒரு இனத்தின் ஆட்சியென்று அறிவித்தேன். சமூக நீதி, சம உரிமை, மாநில சுயாட்சி, இன உரிமை, மொழிப்பற்று ஆகிய எல்லாமும் ஒன்றிணைந்ததுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி."
"திராவிடம் என்றால் 'எல்லாருக்கும் எல்லாம்' என்பது பொருள்! இன்னாருக்குக் கல்வியைக் கொடு இன்னாருக்குக் கொடுக்காதே, இன்னாரைக் கோவில்களுக்குள் விடு இன்னாரை விடாதே, என்பது ஆரிய மாடல்."
பெரியாரின் பேரன் நான்..!
"முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதியது வெறும் கடிதங்கள் அல்ல. அவை அறிவுக்கருவூலங்கள், வரலாற்றுப் ஆவணங்கள், கொள்கை இலக்கியங்கள்."
பெரியாரை வெறும் தமிழ்நாட்டு தலைவர் மட்டும் அல்ல. அனைத்து பிரிவினரின் சுயமரியாதையைப் பாதுகாத்த தலைவர். பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன் நின்று உரையாற்றுகிறேன். உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெறப்படுவது சுயமரியாதை மட்டும் தான்.