முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்துப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்படுவதற்கு முன்னதாக, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
பென்னிகுயிக் குடும்பத்தினர் நெகிழ்ச்சி:
இந்தச் சந்திப்பின்போது, முல்லைப்பெரியாறு அணையை உருவாக்கி, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் தமிழக அரசு சார்பில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் முதல்வருக்குத் தங்கள் நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பதிவு:
இந்தச் சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில், "முல்லைப்பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க JohnPennyCuick அவர்களது புகழ்!" என்று பதிவிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு:
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களால் 1893ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு கிழக்கு நோக்கித் தண்ணீரை அனுப்பும் ஒப்பந்தத்தையும் அவர் பெற்றுத் தந்தார். இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குகிறது. அணையின் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணை கட்டும் பணி 1887ஆம் ஆண்டு தொடங்கி 1893ஆம் ஆண்டில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
