- Home
- Tamil Nadu News
- விஜய்க்கு 'செக்' வைக்கும் சிபிஐ? 8 மணி நேரம்.. ஆதவ், ஆனந்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்.. பதறும் தவெக!
விஜய்க்கு 'செக்' வைக்கும் சிபிஐ? 8 மணி நேரம்.. ஆதவ், ஆனந்திடம் கிடுக்குப்பிடி கேள்விகள்.. பதறும் தவெக!
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தவெகவினர் கரூர் கூட்டத்துக்கு காவல்துறையிடம் சமர்பித்த அனுமதி கடிதம் ஆகியவற்றை வைத்து சிபிஐ அதிகாரிகள் மடக்கி மடக்கி கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
தொடர் விசாரணை தீவிரம்
கரூர் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி இருந்தனர்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணை
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேற்கண்ட 3 பேரும் இன்று காலை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற விசாரணையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கிடுக்குபிடி கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 மணி நேரம் கிடுக்குப்பிடி கேள்விகள்
அதாவது கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தாரா? எத்தனை மணி நேரம் தாமதமாக விஜய் வந்தார்? அவர் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்? கரூரில் எத்தனை லட்சம் பேர் கூடினார்கள்? கரூர் கூட்டத்துக்கு காவல்துறையினரிடம் எத்தனை பேரிடம் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் 3 பேரிடம் கேட்கப்பட்டது.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தவெகவினர் கரூர் கூட்டத்துக்கு காவல்துறையிடம் சமர்பித்த அனுமதி கடிதம் ஆகியவற்றை வைத்து சிபிஐ அதிகாரிகள் மடக்கி மடக்கி கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
கடைசியில் சிக்கும் விஜய்
சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவர்கள் 3 பேரும் வெளியே வந்தனர். நாளையும் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 பேரிடமும் விசாரணை நடைபெற உள்ளது. தவெகவின் முக்கியப் புள்ளிகளிடம் விசாரணை நடத்தி விட்டு கடைசியாக தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு தவெக தீவிரமாக ரெடியாகி வரும் நிலையில், சிபிஐ விசாரணை தீவிரமடைவது தவெகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ மூலம் விஜய்க்கு செக் வைத்து தேர்தலில் அவர் மூலம் பாஜக ஆதாயம் அடைய முயற்சிப்பதாக ஒருசிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

