மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர் என்று கேப்டன் விஜயகாந்துக்கு விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதேபோல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரும் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
கேப்டன் விஜயகாந்துக்கு எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ''ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தை நினைவுகூர்ந்த இபிஎஸ், விஜய்
மேலும் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''வானத்தைப் போல" மனம் படைத்து, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், "பத்ம பூஷன்" அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் தவெக தலைவர் விஜய்யும் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், ''மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி'' என்று கூறியுள்ளார்.


